ADDED : டிச 12, 2024 01:42 AM
சென்னை:சென்னை ரயில்வே பணிமனை மேலாளரிடம், சைபர் குற்றவாளிகள், ஆன்லைன் வாயிலாக, புதிய முறையில், 50,000 ரூபாய் மோசடி செய்துஉள்ளனர்.
சென்னையில் உள்ள ரயில்வே பணிமனையில் மேலாளராக பணிபுரிபவர் சச்சின் புனித்.
அவருக்கு, வாட்ஸாப் செயலியில், ரயில்வே பொதுமேலாளர் புகைப்படத்துடன் துவக்கப்பட்ட குழுவில் இருந்து, மருத்துவ செலவுக்கு, உடனடியாக 50,000 ரூபாய் வேண்டும் என, தகவல் வந்துள்ளது.
அதைத் தொடர்ந்து, மர்ம நபர்கள் தெரிவித்த எண்ணுக்கு, 50,000 ரூபாய் அனுப்பி உள்ளார். பிறகுதான், தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து, சென்னை பூக்கடை போலீசில் புகார் செய்தார். இப்புகார் சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில், மர்ம நபர் ஊராட்சி தலைவர்களின் மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு, தான் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பணிபுரிவதாகவும், தன் மகனின் மருத்துவ செலவுக்கு, அவசரமாக பணம் தேவை எனக் கூறி பணம் கேட்டதாகவும், விசாரித்ததில் அவர் மோசடி நபர் என்பதும் தெரிய வந்துள்ளது.
அதைத் தொடர்ந்து, இதுபோன்ற நபர்களை நம்பி பணம் கொடுக்க வேண்டாம் என, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் அஜய்குமார், ஊராட்சி தலைவர்களுக்கு, தகவல் அனுப்பி உள்ளார்.

