ரயில்களில் திண்பண்டங்களை வீசாதீர் பயணியருக்கு ரயில்வே வேண்டுகோள்
ரயில்களில் திண்பண்டங்களை வீசாதீர் பயணியருக்கு ரயில்வே வேண்டுகோள்
ADDED : செப் 17, 2025 01:13 AM
சென்னை:'திண்பண்டங்களை கீழ வீசுவதால், நாய், எலிகள் தொல்லை அதிகரிக்கிறது. இதை தவிர்க்க, திண்பண்டங்களை கீழே வீசுவதை தவிர்த்து, ரயில் நிலையங்களை துாய்மையாக வைத்திருக்க உதவுங்கள்' என, பயணியருக்கு தெற்கு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை;
ரயில் நிலையங்களில், தினமும் பல ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ரயில் நிலையங்களை துாய்மையாக வைத்திருப்பது ஒரு கூட்டு முயற்சி. 'துாய்மை இந்தியா இயக்கம்' போன்ற முதன்மை முயற்சிகள், தொடர்ச்சியான பராமரிப்பு பணிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.
எனினும், குப்பையை வீசுவது, ஒரு தீவிரமான கவலையாகவே உள்ளது. நடைமேடைகள் மற்றும் ரயில் பெட்டிகளில், காலி தண்ணீர் பாட்டில்கள், தின்பண்ட உறைகள், பாலிதீன் பைகள், தேநீர் கோப்பைகள், உணவு பொட்டலங்கள் மற்றும் பிற அப்புறப்படுத்தப்பட்ட பொருட்கள் சிதறி கிடக்கின்றன.
இத்தகைய பொறுப்பற்ற செயல்பாடு, ரயில்வேயின் தொடர்ச்சியான முயற்சிகளை பாதிப்பதோடு, ஒட்டுமொத்த பயணியரின் அனுபவத்தையும் பாதிக்கிறது. பயணியர் வீசும், உணவுக் கழிவுகளை தேடி, எலிகள், தெரு நாய்கள் மற்றும் கால்நடைகள் வளாகத்திற்குள் வருகின்றன. இது துாய்மை மற்றும் சுகாதாரத்தை பாதிக்கிறது, பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்துகிறது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சாரணர் மற்றும் சாரணியர் இயக்கம், ரயில் பயணிகள் சங்கங்கள், சமூக அமைப்புகள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை இணைந்து, இன்று முதல் அக்., 2 வரை துாய்மை, மரக்கன்றுகள் நடுவதில் கவனம் செலுத்துகிறது.
தண்ணீர் பாட்டில்கள், உணவுப் பொட்டலங்கள், கோப்பைகள் அல்லது எந்தக் கழிவுகளையும், நடைமேடை, தண்டவாளம் மற்றும் ரயில்களுக்குள், பயணியர் வீச வேண்டாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

