பிப்ரவரியில் சரக்கு போக்குவரத்தில் ரூ.14,572 கோடி அள்ளியது ரயில்வே
பிப்ரவரியில் சரக்கு போக்குவரத்தில் ரூ.14,572 கோடி அள்ளியது ரயில்வே
ADDED : மார் 08, 2026 02:08 AM

சென்னை: ரயில்வேயில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சரக்கு போக்குவரத்து பிரிவில், 14,572 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டில் இதுவரையில், 1,60,987 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
ரயில்வேயில் கூடுதல் சரக்குகளை கையாளுவது, பார்சல் ரயில்களை இயக்குவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கூடுதல் கவனம் இதன் பயனாக, சரக்கு ரயில் போக்குவரத்து பிரிவில் ஆண்டுதோறும் சராசரியாக, 20 சதவீதம் வரை வருவாய் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, நிலக்கரி, உரம், சிமென்ட், தானியங்கள் போல், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் அதிகளவில் அனுப்பி வைத்து, அதன் வாயிலாக வருவாய் அதிகரித்து வருகிறது.
இது குறித்து, தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனை குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறியதாவது:
ரயில்வேயில் பயணியர் கட்டணம் உயர்வு இன்றி, இதர வழிகளில் வருவாயை பெருக்குவதில், ரயில்வே கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
இதற்காக, அனைத்து கட்டமைப்புகளையும் ரயில்வே மண்டலங்களில் படிப்படியாக செயல்படுத்தி வருகிறது.
கூ டுதல் 'ஷெட்'டுகள் அமைப்பது, நடைமேடைகள் விரிவாக்கம், பிரத்யேக பெட்டிகள் இணைப்பது, தொடர்ந்து பொருட்களை ரயில்களில் கொண்டு செல்வோருக்கு சலுகை அளிப்பது போன்ற பல்வேறு புதிய திட்டங்களை செயல் படுத்துவதால், சரக்கு பிரிவின் வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, நிலக்கரி, இரும்பு, உரங்கள், சிமென்ட், உணவு தானியங்கள் மற்றும் கொள்கலன்கள், வாகனங்கள் அதிகளவில் கொண்டு செல்லப்படுகின்றன. கடந்த பிப்ரவரி மாதத்தில் மட் டும், 137.72 மில்லியன் டன் சரக்குகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
இது, அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில், 3.96 சதவீதம் அதிகம். பிப்ரவரி மாதத்தில் சரக்கு பிரிவில் மட்டும், 14,571.99 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது, முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில், 2.97 சதவீதம் அதிகம் .
வருவாய் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல், நடப்பாண்டு பிப்ரவரி வரை சரக்கு வருவாய், 1 லட்சத்து, 60,987 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலகட்டத்தை விட, 1.54 சதவீதம் அதிகம்.
சரக்கு ரயில்களுக்கான பிரத்யேக ரயில் பாதைகள் அமைப்பது, நவீன சரக்கு பெட்டிகள், குடோன்கள் அமைப்பது போன்ற தொலைநோக்கு திட்டங்கள் வாயிலாக, வரும் ஆண்டுகளில், ரயில்வே சரக்கு பிரிவில் வருவாய் மேலும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

