வந்தே பாரத் ரயில் சக்கரங்கள் தயாரிப்பில் ரயில்வே தன்னிறைவு
வந்தே பாரத் ரயில் சக்கரங்கள் தயாரிப்பில் ரயில்வே தன்னிறைவு
ADDED : நவ 08, 2025 02:31 AM
சென்னை: 'வந்தே பாரத் ரயிலுக்கான சக்கரங்கள் தயாரிப்பில், ரயில்வே தன்னிறைவை பெற்றுள்ளது' என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
வந்தே பாரத் ரயில்களுக்கு பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அடுத்த கட்டமாக, வந்தே பாரத் ஸ்லீப்பர், பார்சல் ரயில் தயாரிப்புகள் முடிந்துள்ளன.
ப ல கட்ட சோதனைக்கு பின், இவை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளன. வந்தே பாரத் ரயில் தயாரிப்பிற்கு தேவையான பொருட்களில், 15 சதவீதம் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
குறிப்பாக , சக்கரங்கள் உக்ரைனில் இறக்குமதி செய்யப்பட்டு, வந்தே பாரத் ரயில்களில் இணைக்கப்பட்டன.
உக்ரைன் - ரஷ்யா போர் ஏற்பட்ட பிறகு, உக்ரைனில் இருந்து, ரயில் சக்கரங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், வந்தே பாரத் ரயிலுக்கான சக்கரங்களை உள்நாட்டில் தயாரிக்க, பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் அடிப்படையில், 'ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா, ரயில் வீல்ஸ் பேக்ட்ரி' ஆகிய மத்திய அரசு நிறுவனங்கள் உட்பட நான்கு நிறுவனங்கள், வந்தே பாரத் ரயில்களுக்கான சக்கரங்களை தயாரிப்பில் இறங்கின.
தற்போது வந்தே பாரத் வகை ரயில்களுக்கான, சக்கரங்கள் கிடைப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. இதில், தன்னிறைவை பெற்றுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

