சரக்கு போக்குவரத்து பூங்காவுக்கு மத்திய அரசு உதவி நிலம் வழங்கி பயன்படுத்திக் கொள்ளுமா தமிழகம்?
சரக்கு போக்குவரத்து பூங்காவுக்கு மத்திய அரசு உதவி நிலம் வழங்கி பயன்படுத்திக் கொள்ளுமா தமிழகம்?
ADDED : நவ 08, 2025 02:31 AM
சென்னை: உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க, தமிழகம் உட்பட நாடு முழுதும் சரக்குகளை விரைவாக எடுத்து செல்ல, பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காக்களை அதிகளவில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது.
'பார்சல்' விரைவாக நிலம் வழங்கினால், பொதுத்துறை நிறுவனங்கள் வாயிலாக பணிகளை விரைவாக துவக்க, மத்திய அரசு ஆர்வமாக உள்ளது.
டில்லி, ஹரியானா, உ.பி., உள்ளிட்ட வட மாநிலங்களில், பல்வேறு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் சரக்குகள், பல்முனைய சரக்கு போக்குவரத்து முனைய பூங்கா என்ற இடத்துக்கு எடுத்து வரப்படுகின்றன.
அங்கு கிடங்கு, குளிர்பதன கிடங்கு, பேக்கேஜிங் மையம், சரக்குகளை விரைவாக கையாளும் நவீன சாதனங்கள் உள்ளன.
இதனால், சரக்குகளை விரைவாக 'பார்சல்' செய்து, தனி சரக்கு ரயில்களில் பிற மாநிலங்களுக்கும், துறைமுகங்களுக்கும் அனுப்பப்பட்டு, கப்பல் வாயிலாக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப் படுகிறது.
தமிழகத்தில், திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில், 1,423 கோடி ரூபாயில், 182 ஏக்கரில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்கப்பட உள்ளது.
கோவை மாவட்டம், சூலுார் மற்றும் துாத்துக்குடியில், பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
'தற்சார்பு இந்தியா' திட்டத்தின் கீழ், நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை பயன்படுத்துமாறு மக்களை மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
ஊக்குவிப்பு இதற்காக, உள்நாட்டில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் சரக்குகளை, நாடு முழுதும் விரைவாக எடுத்து செல்வதற்கு, அதிகளவில் பல்வகை சரக்கு போக்குவரத்து முனைய பூங்காக்களை அமைக்க உள்ளது.
இதற்கான தேவை தொடர்பாக, மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் கீழ் இயங்கும் உள்நாட்டு ஊக்குவிப்பு துறை அதிகாரிகள், தமிழக தொழில் துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினர்.
இது குறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில், கிருஷ்ண கிரி மாவட்டம் ஓசூர் மற்றும் மதுரை, திருச்சி என, பல இடங்களில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது.
இதற்காக, ஒவ்வொரு இடத்திலும், ரயில் நிலையங்களில் இருந்து, 20 கி.மீ., சுற்றளவில், 200 - 250 ஏக்கரை தமிழக அரசு விரைவாக கையகப் படுத்தி தந்தால், பொதுத்துறை நிறுவனங்கள் வாயிலாக பல்வகை முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்க, மத்திய அரசு ஆர்வமாக உள்ளது.
எனவே, தமிழக அரசு தாமதம் செய்யாமல், நிலத்தை வழங்கி, சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்க வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

