ADDED : மே 04, 2025 06:33 AM

சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் நேற்று மதியம் நிலவரப்படி, ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. குழித்துறை, வெம்பக்கோட்டை, கோடநாடு பகுதிகளில் தலா 5 செ.மீ., மழையும், ஓசூர், வால்பாறையில் தலா 4 செ.மீ., மழையும் பெய்துள்ளது.
திருவாரூர், கடனா அணை, தம்மம்பட்டி, மேலாலத்துார், சங்கரன்கோவில், திருச்சுழி, குன்னுார், அழகரை எஸ்டேட், பாலக்கோடு பகுதிகளில், தலா 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தென்மாநிலங்களின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பு நிலவுகிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும். குறிப்பாக, கோவை, திருநெல்வேலி மாவட்டங்களில் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில், நாளை ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் முதல் மே 8 வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்ப நிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்ஷியஸ் அதிகமாகலாம்.
சென்னை, புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.