ADDED : ஜன 19, 2026 04:20 AM

சென்னை: 'தமிழக கடலோர மாவட்டங்களில், வரும் 23ம் தேதி முதல் மிதமான மழை பெய்ய துவங்கும்' என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16ல் துவங்கிய வடகிழக்கு பருவமழை, ஜனவரி 16ல் விலகுவது வழக்கம். நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது என, ஜன., 15ல் தெரிவிக்கப் பட்டது.
அதன்படி, இன்று அல்லது நாளை வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்புள்ளது. இந்நிலையில், குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும், வறண்ட வானிலை காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவும்.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில், 23ம் தேதி முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
உள்மாவட்டங்களில், வறண்ட வானிலை காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் அதிகாலையில் லேசான பனிமூட்டம் இருக்கும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

