தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் டிச.,10 வரை மழை
தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் டிச.,10 வரை மழை
ADDED : டிச 07, 2024 05:50 AM

சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் டிச.,10ம் தேதி வரை மழை தொடரும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை:
இந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், நேற்று முதல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகலாம்.
இது, மேற்கு,- வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 12ம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், இலங்கை- - தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதனால், இன்று முதல் வரும் 10ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
வரும் 11ம் தேதி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் கன மழை பெய்யும். 12ம் தேதி, தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும்.
மேலும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான பனி மூட்டமும், லேசான மழையும் பெய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

