ADDED : ஆக 01, 2025 09:42 PM
சென்னை:தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, தஞ்சாவூர் மாவட்டம் மஞ்சளாறு பகுதியில் 5 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும், 7 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலுார், விழுப்புரம் அரியலுார் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் நாளை கன முதல் மிக கன மழை பெய்யும். அரியலுார், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கன மழையும் பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நடப்பு ஆண்டில், ஜூன் 1 முதல் ஜூலை 31 வரையிலான காலத்தில், தமிழகம், புதுச்சேரியில், 12 செ.மீ., மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், 10 செ.மீ., அளவுக்கு தான் மழை பெய்துள்ளது. இயல்பை விட, 13 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

