ADDED : அக் 29, 2025 06:12 AM

சென்னை: தமிழகத்தில், இன்று முதல், நவ., 3 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையத்தின் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, சென்னை எண்ணுாரில், 13 செ.மீ., வரை மிக கனமழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, 16 இடங்களில் கனமழை பெய்துள்ளது.
இதில், சென்னை எண்ணுார் தானியங்கி வானிலை மையம், வேலுார் மாவட்டம் விரிஞ்சிபுரம் பகுதிகளில் தலா, 11; சென்னை கத்திவாக்கத்தில், 10; விம்கோ நகரில், 9; சென்னை மாதவரம், மணலி புதுநகர், மணலி, மேடவாக்கம் ஆகிய இடங்களில் தலா, 8 செ.மீ., மழை பெய்துள்ளது.
வங்க கடல் பகுதியில் உருவான, 'மோந்தா' புயல், நேற்று காலை தமிழக கடலோர பகுதிகளில் இருந்து விலகி, ஆந்திர கடலோர பகுதிக்கு நகர்ந்தது. இது, நேற்று காலை தீவிர புயலாக வலுவடைந்து, ஆந்திர மாநிலம் காக்கிநாடா நோக்கி நகர்ந்தது.
மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த, 36 மணி நேரத்தில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரியில் இன்று முதல், நவ., 3 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புயல் காரணமாக, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில், கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கான வாய்ப்பு இல்லை என, பி.பி.சி., செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

