ADDED : டிச 01, 2024 12:36 AM

சென்னை: கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முதல்வர் கருணாநிதியின் வீட்டிற்குள் மழை நீர் புகுந்ததை அடுத்து, அதை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
'பெஞ்சல்' புயல் காரணமாக, சென்னையில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களிலும் மழை நீர் குளம் போல தேங்கியது.
குறிப்பாக, கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முதல்வர் கருணாநிதியின் வீட்டிற்குள்ளும் மழைநீர் புகுந்தது. வீட்டை சுற்றிய சாலையிலும் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இரவிலும் மழை தொடர்ந்ததால், மாநகராட்சி அதிகாரிகள் தேங்கிய மழைநீரை இரண்டு மோட்டார்கள் வைத்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, அப்பகுதிமக்கள் கூறியதாவது:
கோபாலபுரம் முழுதும் சாலைகளில் மழைநீர் தேங்காத வகையில், மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டன. ஆனால், அந்த வடிகால் பணிகள் பெயரளவிலயே நடைபெற்றதால், ஒவ்வொரு மழைக்கும், இங்கு சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கி விடுகிறது. அவசர தேவைக்கு மருந்தகம் கூட செல்ல முடிவதில்லை. தற்போது, தி.மு.க., தான் ஆட்சி செய்து வருகிறது. இப்பகுதியில், மழைநீர் தேங்கா வகையில் திட்டத்தை செயல்படுத்தினால், வருங்காலத்தில் மழை பாதிப்பில் இருந்து, கோபாலபுரம் தப்பும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.