மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் மழைநீர்: பக்தர்கள் அதிர்ச்சி
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் மழைநீர்: பக்தர்கள் அதிர்ச்சி
ADDED : ஆக 26, 2025 03:27 AM
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் மழைநீர் ஒழுகியதால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். திருப்பணிகள் நடந்து வரும் நிலையில் கோயில் நிர்வாகம் இதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இக்கோயிலில் அம்மன், சுவாமி சன்னதியையொட்டி இரண்டாம் பிரகாரங்கள் தனித்தனியாக உள்ளன. மன்னர் காலத்திலேயே மழைநீர் சேகரிப்புக்கு உதாரணமாக கோயில் பொற்றாமரைக்குளத்தில் மேல்தளங்களில் இருந்து மழைநீர் விழும் வகையில் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மழைநீர் வெளியேற கால்வாயும் உள்ளது.
கனமழை பெய்யும்போது அவ்வப்போது கீழச்சித்திரைவீதியில் இருந்து அம்மன் சன்னதிக்கு செல்லும் அஷ்டசக்தி மண்டபம் வழியாக மழைநீர் கோயிலுக்குள் புகுந்து பிறகு வடிந்துவிடும். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை பெய்த கனமழைக்கு அம்மன், சுவாமி சன்னதியையொட்டியுள்ள இரண்டாம் பிரகாரத்தில் மழைநீர் ஒழுகியது பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஆலயம் காப்போம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தினகரன் கூறுகையில், ''இரண்டாம் பிரகாரத்தில் தொடர்ந்து மழைநீர் ஒழுகிவருவதால் கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி வருகிறது. நீர் கசிவு குறித்து 2023 நவ.,9லேயே கோயிலுக்கு கடிதம் எழுதினோம். நேற்றுமுன்தினம் முன்பிருந்ததைவிட அதிக மழைநீர் கசிவு பல இடங்களில் ஏற்பட்டது.
தற்போது திருப்பணிகள் நடந்து வரும் நிலையில் இதுகுறித்து கோயில் நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.
கோயில் தரப்பில் கேட்டபோது, 'இரண்டாம் பிரகாரத்தின் மேல்தளத்தில் இருந்த பழைய தட்டோடுகளை அகற்றிவிட்டு புதிதாக அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன்காரணமாக மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. தட்டோடு பதித்த பிறகு மழைநீர் கசிவது முற்றிலும் தடுக்கப்படும்' என்றனர்.

