ADDED : ஜன 31, 2024 02:01 AM
சென்னை:''காங்கிரஸ் குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியது தவறான செயல்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறினார்.
அவரது பேட்டி:
மணிப்பூருக்கு ராகுல் சென்ற பின், இனக்கலவரம் முடிவுக்கு வந்தது. வங்க தேசத்தில் இனக்கலவரம் நடந்தபோது, அங்கு காந்தி சென்றதும், கலவரம் முடிவுக்கு வந்தது. பா.ஜ., கூட்டணியிலிருந்து, அ.தி.மு.க., வெளியேறியதற்கான காரணத்தை சொல்லவில்லை. அவர்களுக்குள் கள்ள உறவு இருக்கிறது என, சந்தேகப்படுகிறோம்.
ஒரு தொகுதியில் ஒரே கட்சி தொடர்ச்சியாக போட்டியிட்டால், கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு இருக்காது. 'சென்னையில் தி.மு.க., மட்டும் தான் போட்டியிட வேண்டுமா; காங்கிரசுக்கு பெற்று தாருங்கள்' என, நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
தி.மு.க.,விடம் பேசி, சென்னையில் ஒரு தொகுதி பெற்று தருவதாக, நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளேன். காங்கிரஸ் தொகுதிகள் கேட்டது குறித்து, அமைச்சர் ராஜகண்ணப்பன் விமர்சித்துள்ளார். அது, தி.மு.க., விதிகளுக்கு முரணானது; தவறானது. அவர் அப்படி பேசியிருக்கக் கூடாது என, தி.மு.க., சொல்ல வேண்டும்.
இவ்வாறு அழகிரி கூறினார்.