பண மோசடி வழக்கு விசாரணை நேரில் ஆஜரான ராஜேந்திர பாலாஜி
பண மோசடி வழக்கு விசாரணை நேரில் ஆஜரான ராஜேந்திர பாலாஜி
ADDED : ஆக 29, 2025 04:04 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த  வழக்குகளில், ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றத்தில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆஜரானார்.
விருதுநகர் மாவட்டம் சாத்துாரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர், தன் சகோதரி மகனுக்கு, ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி அ.தி.மு.க., நிர்வாகி விஜய் நல்லதம்பி, 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, கடந்த 2021ல், போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், விஜய் நல்லதம்பி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது நண்பர்கள் முத்துப்பாண்டி, மாரியப்பன், பாண்டியராஜன், ரவி கணேசன், ராமகிருஷ்ணன், நாகேஷா ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதுதவிர, ராஜேந்திர பாலாஜி பணம் வாங்கிக் கொண்டு, தன்னை ஏமாற்றியதாக விஜய் நல்ல தம்பி கொடுத்த புகாரில், ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளின் விசாரணை, ஸ்ரீவில்லிபுத்துார் மாவட்ட  ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது.
நேற்று இவ்வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட குற்றஞ்சாட்டப்பட்டோர் நேரில் ஆஜராகினர். அவர்களுக்கு, 150 பக்க குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி ஜெயக்குமார், வழக்கு விசாரணையை அக்., 10க்கு ஒத்திவைத்தார்.

