ADDED : மார் 14, 2024 12:54 AM

சென்னை:முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ் தாசை கைது செய்ய, தனிப்படை போலீசார் ஒடிசா விரைந்துஉள்ளனர்.
தமிழக காவல் துறையின், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ் தாசுக்கு, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ராஜேஷ் தாஸ் சரணடையாமல் தலைமறைவாக உள்ளார். அவரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தேடி வருகின்றனர். வெளிநாட்டிற்கு தப்பிக்காமல் இருக்க, விமான நிலையங்களுக்கு, 'லுக் அவுட்' நோட்டீஸ் வழங்கி உள்ளனர். பாஸ்போர்ட்டை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர் விசாரணையில், ராஜேஷ் தாஸ் ஒடிசாவில் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர். விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என, நம்பிக்கை தெரிவித்தனர்.

