UPDATED : ஜன 07, 2024 02:22 AM
ADDED : ஜன 07, 2024 02:21 AM

''விதிகளை மீறி, 'லே அவுட்'களை அமைக்கிறாங்க பா...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய். ''எந்த ஊருல வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''சென்னை, புழல் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏழு ஊராட்சிகள்ல, சி.எம்.டி.ஏ., அனுமதியோட, பிளாட் போட்டு விற்பனை பண்றாங்க பா... 'ஒரு லே அவுட் உருவாக்குனா, சாலை, தடுப்பு சுவர், வாகன நிறுத்தம் அமைக்கணும்... பூங்கா அமைக்க, ௧௦ சதவீதம் இடம் ஒதுக்கணும்'கிறது சி.எம்.டி.ஏ., விதி...
''ஆனா, ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், 'கவனிப்பால' சி.எம்.டி.ஏ., சீனியர் பிளானர் மற்றும் புழல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், இந்த விதிகளை எல்லாம் நேர்ல ஆய்வு செய்றதே இல்ல...
''விதிகளை மீறி லே அவுட்களை உருவாக்குறவங்க, அரசு புறம்போக்கு நீர்நிலைகளையும் வளைச்சு போட்டுக்கிறாங்க பா...'' என்றார்,
அன்வர்பாய்.
''இப்படி எல்லாம் பண்ணிண்டு, நாளைக்கு மழை பெய்யறச்சே, தெரு முழுக்க தண்ணீர் தேங்கிடுத்துன்னு புலம்பினா என்ன அர்த்தம்...'' என, அலுத்துக் கொண்ட குப்பண்ணாவே, ''காளியம்மாளை மீண்டும் களம் இறக்கணும்னு சொல்றா ஓய்...'' என்றார்.
![]() |
''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''கடந்த லோக்சபா தேர்தல்ல, வடசென்னை தொகுதியில, நாம் தமிழர் கட்சி சார்பா, போட்டியிட்டவங்க தான் காளியம்மாள்... அந்த தேர்தல்ல, தி.மு.க.,வின் கலாநிதி ஜெயிச்சிட்டார் ஓய்...
''ஆனாலும், மக்களுக்கு அறிமுகமே இல்லாத காளியம்மாள் 60,515 ஓட்டுகள்
வாங்குனாங்க... அடுத்து வந்த சட்டசபை தேர்தல்ல, வடசென்னைக்கு உட்பட்ட திருவொற்றியூர்ல சீமான் நின்னு, 48,597 ஓட்டுகள் வாங்கினார் ஓய்...
''சமீபத்துல, அமோனியா வாயு கசிவு, எண்ணெய் கழிவு கலப்பு விவகாரம்,
மீனவர் சார்ந்த பிரச்னைக்கு தீர்வு காணாம இருக்கறதுன்னு, ஆளுங்கட்சி மேல மக்கள் கோபமா இருக்கா...
''இதனால, 'இந்த முறையும் காளியம்மாள் வடசென்னையில நின்னா, தி.மு.க.,வுக்கு கடும் போட்டியை உருவாக்க முடியும்'னு, அந்த கட்சியினர் சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''அண்ணனுக்கும் சேர்த்து, அனுமதி வாங்கிட்டாரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''யாரை சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''அயோத்தியில, வர்ற 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்க இருக்குல்லா... நாடு முழுக்க வி.வி.ஐ.பி.,க்கள், சாதுக்கள்னு, ௬,௦௦௦ பேருக்கு தான் அனுமதி தந்திருக்காவ வே...
''இதுல நடிகர் ரஜினிக்கும், அவரது மனைவி லதாவுக்கும் மட்டும் தான் முதல்ல அனுமதி குடுத்திருக்காவ... ஆனா, தன் அண்ணன் சத்யநாரயண ராவுக்கு ௮௪ வயசாகிட்டதால, அவரையும் ராமரை தரிசிக்க அழைச்சிட்டு போக ரஜினி விரும்பியிருக்காரு வே...
''இதை, தன் நெருங்கிய நண்பரும், தமிழக பா.ஜ., சமூக ஊடக பார்வையாளருமான அர்ஜுனமூர்த்தியிடம் சொல்லியிருக்காரு... அவரும், ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளிடம் பேசி, மூணு பேருக்குமா அனுமதி வாங்கி தந்துட்டாரு...
''இவங்க, ௨௧ம் தேதி சென்னை ஏர்போர்ட்ல இருந்து அயோத்திக்கு கிளம்பி, 23ம் தேதி சென்னைக்கு திரும்பி வர்றாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.