ரஜினியின் ரத்த நாளத்தில் 'ஸ்டென்ட்' இரண்டு நாட்களில் வீடு திரும்புவார்
ரஜினியின் ரத்த நாளத்தில் 'ஸ்டென்ட்' இரண்டு நாட்களில் வீடு திரும்புவார்
ADDED : அக் 02, 2024 03:08 AM

சென்னை:ரத்தநாள வீக்கத்தால் பாதிக்கப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிக்கு, 'ஸ்டென்ட்' பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நடிகர் ரஜினி ரத்தநாள வீக்கத்தால் பாதிக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். ரத்தநாள வீக்கத்தை சரிசெய்ய ஸ்டென்ட் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கை: நடிகர் ரஜினி, அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அவரின் இதயத்தில் இருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் 'அயோடா' தமனி, வயிற்றுப் பகுதியில் வீங்கி இருந்தது. இதை, அறுவை சிகிச்சை செய்யாமல், 'டிரான்ஸ்கதீட்டர்' மூலம் சரிசெய்ய முடியும்.
அதன்படி, முதுநிலை இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் சாய் சதீஷ், மகாதமனி வீக்கத்தை சரிசெய்யும் வகையிலும், ரத்த நாளத்தை சீரமைக்கவும், 'ஸ்டென்ட்' பொருத்தினார். தற்போது, ரஜினி உடல்நிலை சீராகவும், நலமாகவும் உள்ளது. இரு நாட்களில் அவர் வீடு திரும்புவார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
'ஸ்டென்ட்' ஏன் வைக்கப்படுகிறது
இதயத்தில் இருந்து பிரியும் மகாதமனி எனும் ரத்தக் குழாயான, 'அயோடா'தான், உடல் முழுதும் ரத்தத்தை எடுத்துச் செல்கிறது. 3.5 செ.மீ., முதல் 4 செ.மீ., சுற்றளவுள்ள இது, வயிற்றுப்பகுதி வரை சென்று, அங்கிருந்து இரு கிளைகளாக பிரிந்து, கால்களுக்குச் செல்லும்.
முக்கியமான இந்த நாளம் பலவீனமடையும்போது வீங்கி பலுான் போல விரிவடையும். தொடர்ந்து பலவீனமடைந்தால் வெடித்து உடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டு ஆபத்தை உருவாக்கும். ரத்தத்தின் வேகம் சீரற்றுப் போவதால் மற்ற உறுப்புகளிலும் பிரச்னை உருவாகும்.
இந்த வீக்கத்தை துவக்கத்திலேயே கண்டறிந்து, 'எண்டோவாஸ்குலர் ரிப்பேர்' சிகிச்சை அளித்தால், பிரச்னையை சரி செய்யலாம். அதாவது, தொடைப்பகுதியில் சிறு துவாரத்தின் வாயிலாக, ஒயர் போன்ற கருவி செலுத்தப்படும். அது, அங்குள்ள ரத்த நாளத்துக்குள் ஊடுருவி, வீக்கம் உள்ள பகுதிக்குச் செல்லும்.
அக்கருவியில் உள்ள வலைப்பின்னல் போன்ற 'ஸ்டென்ட்' என்ற அமைப்பு, பாதிக்கப்பட்ட பகுதியில் விடுவிக்கப்படும். அது, ரத்த நாளத்தில் தேவையான அளவு ரத்தம் பாயும் அளவுக்கு மட்டும் விரிவடையும். இதனால், வீக்கமடைந்த பகுதிக்கு, தேவையில்லாமல் ரத்தம் செல்வது தடுக்கப்படும்.