'86 கோடி ஒதுக்குங்கள்' மூர்த்தியிடம் முறையிட்ட ராஜு
'86 கோடி ஒதுக்குங்கள்' மூர்த்தியிடம் முறையிட்ட ராஜு
ADDED : அக் 27, 2024 12:14 AM

மதுரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செல்லுார் பகுதியில் ஆய்வு செய்த அமைச்சர் மூர்த்தியும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜுவும் சந்தித்துக் கொண்டனர்.
அப்போது, 'பந்தல்குடி கால்வாயை துார்வார மதிப்பீடு செய்த 86 கோடி ரூபாயை ஒதுக்க அரசிடம் வலியுறுத்துங்கள்' என, மூர்த்தியிடம், செல்லுார் ராஜு கூற, 'அதுகுறித்து ஏற்கனவே அமைச்சர் துரைமுருகன் அறிவித்துவிட்டார்' என, எம்.எல்.ஏ., தளபதி கூறினார். சில நிமிடங்கள் வெள்ள பாதிப்பு குறித்து விவாதம் நடந்தது. பின்னர், 'மற்றொரு இடத்தில் தோண்டும் பணி நடக்கிறது. அங்கு செல்கிறேன்' என, செல்லுார் ராஜுவிடம் கூறிவிட்டு மூர்த்தி கிளம்பினார்.
செல்லுார் ராஜு கூறியதாவது:
கடந்த, 1993ல் இதைவிட அதிக கனமழை செல்லுார் பகுதிகளில் பெய்தது. இப்பகுதியில், 6 முதல் 7 அடி உயரத்திற்கு வெள்ளம் வரும். தி.மு.க., ஆட்சியில் மூன்று ஆண்டுகளாக பொதுப்பணித்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்று செய்வது போல் இந்த அரசு செயல்படுகிறது. ஏற்கனவே சீரமைத்திருந்தால், இந்த அளவுக்கு பாதிப்பு வந்திருக்காது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25,000 ரூபாய் நிவாரணம் கொடுக்க வேண்டும். இரண்டு மாதத்திற்கு முன் மாநகராட்சியில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இதுகுறித்து மனு கொடுத்தோம். செல்லுார் பகுதி வாய்க்கால்களை துார் வாருங்கள் என, கலெக்டரிடம் மனு கொடுத்தோம். மழை வந்த பிறகு நடவடிக்கை எடுக்கின்றனர்.
மாவட்ட நிர்வாகத்தின் கவனக்குறைவு உள்ளது. பணி நிறைவாக இல்லை. அமைச்சர் மூர்த்தி, 'இந்த பிரச்னை சரி செய்யப்படும். பாதிப்பு இருக்காது' என்கிறார். ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.
இவ்வாறு அவர் கூறினார்.