விவசாயிகளை மிரட்டி போராட்டத்தை துாண்ட வேண்டாம்: ராமதாஸ் எச்சரிக்கை
விவசாயிகளை மிரட்டி போராட்டத்தை துாண்ட வேண்டாம்: ராமதாஸ் எச்சரிக்கை
ADDED : பிப் 18, 2025 08:17 PM
சென்னை:'மேல்மா சிப்காட்டிற்கு நிலம் எடுப்பதை எதிர்த்து போராடும் விவசாயிகளை மிரட்டி, போராட்டத்திற்கு துாண்ட வேண்டாம்' என, தமிழக அரசுக்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
அவரது அறிக்கை:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்காக, 2700 ஏக்கர் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகளை, ஆளும் கட்சியினர் மிரட்டி வருகின்றனர். தி.மு.க.,வை சேர்ந்த ஆரணி எம்.பி.,யும், செய்யாறு எம்.எல்.எ.,வும் விவசாயிகளை அச்சுறுத்தும் வகையில், பேட்டி கொடுத்துள்ளனர்.
அதை கண்டித்து, அவர்களின் உருவ பொம்மைகளை, விவசாயிகள் எரித்தனர். அங்கு வந்த தி.மு.க., நிர்வாகி ஒருவர், 'நிலம் எடுப்பதற்கு எவராவது எதிர்ப்பு தெரிவித்தால், அவர்களை குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி எரித்து விடுவோம்' என, மிரட்டியுள்ளார்.
ஜனநாயகத்தில் அடக்குமுறை ஒருபோதும் வென்றது கிடையாது. ஓட்டுரிமை என்ற அதிகாரத்தை மக்கள் பயன்படுத்தினால், ஆட்சியாளர்கள் காணாமல் போய் விடுவர். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகளை, முதல்வர் ஸ்டாலின் இதுவரை சந்திக்கவில்லை.
கடந்த 2006 -- 2011 தி.மு.க., ஆட்சியில் துணை நகரம் அமைக்க, பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த, அரசு முடிவு செய்திருந்தது. நேரடியாக போராட்டம் நடத்தி, அனைத்து நிலங்களையும் மக்களுக்கு மீட்டெடுத்து கொடுத்தேன். தேவைப்பட்டால், மேல்மா விவசாயிகளின் நிலங்களை காக்க, நேரடியாக களமிறங்கி போராட தயங்க மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

