ராமதாஸ் - அன்புமணி வழக்கு: தேர்தலுக்கு பின் விசாரிக்க உத்தரவு
ராமதாஸ் - அன்புமணி வழக்கு: தேர்தலுக்கு பின் விசாரிக்க உத்தரவு
ADDED : மார் 18, 2026 04:36 AM

சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் - அன்புமணி தொடர்புடைய வழக்குகளில், உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளின் விசாரணையை தேர்தலுக்கு பின், உரிமையியல் நீதிமன்றம் மேற்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளது.
பா.ம.க., பெயர், சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்த, அன்புமணிக்கு தடை விதிக்க கோரி, கட்சி நிறுவனர் ராமதாஸ் தரப்பில், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இடைக்கால தடை
ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை நிராகரிக்கக் கோரி, அன்புமணி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், தன்னை வழக்கில் இணைக்க கோரி, கட்சி பொதுச் செயலர் வடிவேல் ராவணனும் மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த தடையை நீக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன் விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ''இந்த வழக்குகளில், எந்த உத்தரவு பிறப்பித்தாலும், அது தேர்தல் நடைமுறைக்கு இடையூறாக இருக்கும்,'' என கூறி, சென்னை உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்தார்.
அனைத்து வழக்குகள்
மேலும், உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து இடைக்கால மனுக்கள் மீதான விசாரணைக்கும் தடை விதித்த நீதிபதி, ''அனைத்து வழக்குகளையும் தேர்தல் முடிந்து, மே 10ம் தேதிக்கு பின் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்,'' என, உரிமையியல் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.

