பெட்ரோல் குண்டுகள் வீசி பா.ம.க.,வினர் மீது தாக்குதல் * வி.சி., மீது ராமதாஸ் குற்றச்சாட்டு
பெட்ரோல் குண்டுகள் வீசி பா.ம.க.,வினர் மீது தாக்குதல் * வி.சி., மீது ராமதாஸ் குற்றச்சாட்டு
ADDED : ஜன 17, 2025 09:24 PM
சென்னை:ராணிப்பேட்டை மாவட்டம் திருமால்பூரில், பா.ம.க.,வினர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெட்ரோல் குண்டு வீசியதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த திருமால்பூரில், பா.ம.க.,வினர் மீது வி.சி., கட்சியைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கியதில், இருவர் உடல் முழுதும் தீக்காயம் அடைந்து, உயிருக்கு போராடி வருகின்றனர். இதற்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்யாமல் பாதுகாக்க, காவல் துறை முயற்சிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது..
பா.ம.க.,வினர் மீதான இந்த கொடிய தாக்குதலுக்கு வி.சி.,யினரின் ஜாதி வெறியும், கட்டுப்படுத்தப்படாத கஞ்சா புழக்கமும் தான் காரணம். வி.சி.,யினர் ஜாதி அடிப்படையிலான அட்டகாசம் மீண்டும் தலைதுாக்கியிருக்கிறது.
பா.ம.க.,வினர் மீது பெட்ரோல் குண்டு வீசிய ஆறு பேரையும் கைது செய்து, சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டிய காவல் துறை, அவர்களில் பிரேம் உள்ளிட்ட இருவரை மட்டுமே கைது செய்துள்ளது. மீதமுள்ள குற்றவாளிகளை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் இத்தகைய தாக்குதல்கள் நடக்காத வகையில், ஜாதி வெறி சக்திகளை கட்டுப்படுத்த, காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
***