ADDED : ஏப் 18, 2026 05:28 AM

திண்டிவனம்: மூத்த குடிமக்களுக்கான தபால் ஓட்டை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், நேற்று தேர்தல் அதிகாரி முன்னிலையில் பதிவு செய்தார்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பூர்வீக வீடு திண்டிவனம், காமாட்சியம்மன் கோவில் வீதியில் உள்ளது.
ஒவ்வொரு தேர்தலின் போதும், தன் குடும்பத்தினருடன், அங்குள்ள ஓட்டுச்சாவடியில், அவர் ஓட்டு போடுவது வழக்கம். தற்போது, சேலத்தில் பிரசாரத்தில் இருந்தபோது, ராமதாஸ் மயக்கமடைந்து, சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
சிகிச்சை முடிந்து, நேற்று முன்தினம், திண்டிவனம் தைலாபுரத்தில் உள்ள தன் வீட்டிற்கு வந்தார்.
தற்போது, அவருக்கு 87 வயது ஆவதால், தேர்தலில் நேரடியாக ஓட்டளிக்க முடியாத 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான தபால் ஓட்டு வாய்ப்பை ராமதாஸ் பெற்றுள்ளார்.
அதன்படி, ராமதாஸ் வசிக்கும் தைலாபுரம் தோட்டத்திற்கு, நேற்று காலை 10:30 மணியளவில் மண்டல உதவி தேர்தல் அலுவலர் மகேந்திரன் தலைமையில் வருவாய்த் துறையினர் சென்றனர்.
அவர் முன்னிலையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தன்னுடைய தபால் ஓட்டை பதிவு செய்தார். அவரது மூத்த மகள் ஸ்ரீகாந்தி, பேரன் முகுந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.
