தேர்தல் கமிஷனுக்கு எதிராக வழக்கு தொடர்கிறார் ராமதாஸ்
தேர்தல் கமிஷனுக்கு எதிராக வழக்கு தொடர்கிறார் ராமதாஸ்
ADDED : நவ 12, 2025 06:41 AM

சென்னை: பா.ம.க., தலைவராக தன்னை தேர்தல் கமிஷன் அங்கீகரிக்காவிட்டால், வழக்கு தொடர, அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் முடிவு செய்துள்ளார்.
பா.ம.க., தலைவராக அன்புமணியை, தேர்தல் கமிஷன் சமீபத்தில் அங்கீகரித்துள்ளது. இதை திரும்பப் பெற்று, ராமதாஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்க வேண்டும் என, கடந்த செப்டம்பர் 16ம் தேதி, பா.ம.க., கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, தலைமை தேர்தல் கமிஷனில் மனு அளித்தார்.
ராமதாஸ் தலைமையில் நடந்த செயற்குழு, பொதுக்குழு தீர்மான நகல்களையும் சமர்ப்பித்தனர். தேர்தல் கமிஷன் அந்த கோரிக்கையை ஏற்று எந்த முடிவையும் எடுக்கவில்லை.
ராமதாஸ் ஆதரவு நிர்வாகி கூறியதாவது:
பீஹார் தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறி, பா.ம.க.,வின் மாம்பழம் சின்னத்தை, அன்புமணி பெற்றுள்ளார். அதன் அடிப்படையில், அவரை கட்சித் தலைவராக, தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த ராமதாஸ், பா.ம.க., தலைவராக தன்னையே அங்கீகரித்து, கட்சியின் பெயர், சின்னம், கொடியை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என, ஜி.கே.மணி வாயிலாக தலைமை தேர்தல் கமிஷனில் மனு அளித்துள்ளார்.
பீஹார் தேர்தல் நடந்ததால், இந்த விஷயத்தில், தேர்தல் கமிஷன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் முடிந்து விட்டதால், நடவடிக்கை இருக்கும் என ராமதாஸ் தரப்பு எதிர்பார்க்கிறது.
நடவடிக்கை தள்ளிப்போனால், தேர்தல் கமிஷனுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர, ராமதாஸ் முடிவு செய்துள்ளார். இதற்கான சட்ட ஆலோசனை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

