எஸ்.ஐ., நியமனத்தில் இடஒதுக்கீடு உறுதிப்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்
எஸ்.ஐ., நியமனத்தில் இடஒதுக்கீடு உறுதிப்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்
ADDED : ஏப் 23, 2025 11:25 PM
சென்னை:'சப் இன்ஸ்பெக்டர்கள் நியமனத்தில், 69 சதவீத இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக காவல் துறைக்கு, 621 சப் -இன்ஸ்பெக்டர்களை நியமிப்பதற்காக, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தயாரித்து வெளியிட்ட பட்டியல் செல்லாது என்று, சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் தீர்ப்பளித்துள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீட்டு விதிகள் சரியாக பின்பற்றப்படாததே, இதற்கு காரணம்.
தமிழகத்தில், 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்து, 36 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்த புரிதல் கூட, தமிழக தேர்வாணையங்களுக்கு இல்லாதது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசு தலையிட்டு அதை சரி செய்யாமல், சமூக நீதியைக் காக்கும் கடமையிலிருந்து தவறி விட்டது. இதனால், கடந்த காலங்களில் நடந்த பணி நியமனங்களில், இட ஒதுக்கீட்டு விதிகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்ற சந்தேகம் எழுகிறது.
எனவே, இது குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். இனிவரும் காலங்களில், 69 சதவீத இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை, தமிழக அரசு வழங்க வேண்டும். தேர்வுப் பட்டியலைத் தயார் செய்யும் பணியை கண்காணிக்க, உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை அரசு நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

