'எங்கள் ஊரில் கஞ்சா - குடிபழக்கம் இல்லை' போர்டு வைக்க ராமதாஸ் வலியுறுத்தல்
'எங்கள் ஊரில் கஞ்சா - குடிபழக்கம் இல்லை' போர்டு வைக்க ராமதாஸ் வலியுறுத்தல்
ADDED : மே 26, 2025 07:30 AM

திண்டிவனம்: ''சமூக முன்னேற்ற சங்கத்திற்கு தனியாக சமூக வலைதளத்தை நானே துவங்க போகிறேன்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
திண்டிவனத்தில் பா.ம.க.,வின் அமைப்பான சமூக முன்னேற்ற சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று காலை நடந்தது.
அமைப்பின் மாநில தலைவர் பேராசிரியர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், பா.ம.க., நிறுவன தலைவர் ராமதாஸ் பேசியதாவது:
சமூக முன்னேற்ற சங்க நிர்வாகிகள், கிராம பிள்ளைகளுக்கு மேற்படிப்புக்கான பயிற்சி அளித்து ஊக்குவிக்க வேண்டும். ஏழை, எளிய கிராம பகுதி மக்கள் பள்ளி படிப்பில் முன்னேற, அரசு வேலை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
கிராமங்களில் கூட்டம் போட்டு, கஞ்சா மற்றும் குடிப்பழக்கம் யாருக்கும் இல்லை என்ற நிலையை உருவாக்கி, 'எங்கள் ஊரில் கஞ்சா இல்லை; குடிப்பழக்கம் யாருக்கும் இல்லை' என, போர்டு வைக்க வேண்டும்.
மொபைல் போனில் தான், அண்ட சராசரமும் அடங்கியுள்ளது. சோஷியல் மீடியாவில் நல்ல நல்ல பதிவுகளை போட வேண்டும். அது எந்த சமூகமாக இருந்தாலும் முன்னேற்றத்திற்காக அதை பயன்படுத்த வேண்டும்.
சமூக முன்னேற்ற சங்கத்திற்கென்று தனியாக சமூக வலைதளத்தை நானே துவங்க போகிறேன். எல்லா சமூத்தவருக்கும் பயனுள்ளதாக அது இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.