வன்னியர்களின் இட ஒதுக்கீட்டை கெடுத்த தி.மு.க., ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவர் விழுப்புரத்தில் ராமதாஸ் ஆவேசம்
வன்னியர்களின் இட ஒதுக்கீட்டை கெடுத்த தி.மு.க., ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவர் விழுப்புரத்தில் ராமதாஸ் ஆவேசம்
ADDED : டிச 24, 2024 09:42 PM

விழுப்புரம்:''வன்னியர்களின் இட ஒதுக்கீடு வாய்ப்புகளை கெடுத்தது தி.மு.க., தான்; இனவெறி வன்மம் மிகுந்த ஆட்சிக்கு அனைத்து தரப்பு மக்களும் சேர்ந்து முடிவு கட்டுவர்,'' என, விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
விழுப்புரத்தில் பா.ம.க., சார்பில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்காத தி.மு.க., அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:
வன்னியர்களுக்கு, 10.5 சதவீதம் தனி ஒதுக்கீடு வழங்குவது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பளித்து, ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான ஒரே ஒரு தரவினை திரட்டி வழங்கலாம் என, கூறியுள்ளது. ஆனால், தி.மு.க., அரசு அதற்கு தடை விதித்து, வழக்கம்போல் பட்டை நாமம் போடும் செயலை செய்கிறது.
55 ஆண்டு கால போராட்ட அத்தியாயத்திற்கு முடிவு கட்ட, வன்னியர்கள் மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களும், தி.மு.க., ஆட்சியை விரட்ட காத்திருக்கின்றனர். இனி ஓட்டுக்கு 10,000 கொடுத்தாலும், தி.மு.க.,விற்கு ஓட்டு கிடைக்காது.
கடந்த 2010ல், 69 சதவீதம் இடஒதுக்கீடை உறுதிசெய்ய ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையம் மூலம் ஏற்பாடு நடந்தது. அதையும் கருணாநிதி தான் தடுத்தார். பழனிசாமி ஆட்சியில், 2020ல், 10.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடுக்கு நடவடிக்கை எடுத்தனர். ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்து வன்னியர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றனர்.
இனி, தி.மு.க., ஆட்சி நீடிக்காது; நீடிக்க விடக்கூடாது.
இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
15% கொடுத்தால் தி.மு.க.,வுக்கு ஆதரவு ?
காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட பா.ம.க., தலைவர் அன்புமணி பேசியதாவது:
தமிழகத்தில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கலாம் என தீர்ப்பளித்து, 1,000 நாட்கள் கடந்துவிட்டது. ஆனால், தி.மு.க., அரசு கண்டுகொள்ளவில்லை.
நீதியரசர் தணிகாசலம் ஆணையம் பரிந்துரை கொடுத்துள்ளது. அதில், 'வன்னியர்களின் எண்ணிக்கை மட்டும் தான் இருக்கிறது. வன்னியர் சமூகத்தின் பின்தங்கிய நிலை குறித்து பரிந்துரையில் இல்லை.
'அதனால், தமிழக அரசு, வன்னியர்களின் மக்கள் தொகை, சமூக பின்தங்கிய நிலை இரண்டையும் வைத்து, வன்னியர்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என, உச்ச நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
வன்னியர்களுக்கு 15 விழுக்காடு உள் ஒதுக்கீடு தி.மு.க., அரசு கொடுத்தால், வரும் சட்டசபைத் தேர்தலில் நிபந்தனை இல்லாமல், தி.மு.க.,வுக்கு ஆதரவு கொடுக்கிறோம்.
கடந்த 1967ம் ஆண்டு நடந்த தேர்தலில், 138 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது தி.மு.க., அரசு. அதில், 90 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் வடமாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
மூத்த அமைச்சர் துரைமுருகன் கட்சிக்காக உழைக்கவில்லையா? இன்றைக்கு தி.மு.க.,விலேயே மூத்தவர் அவர் தான். எவ்வளவு தியாகம் செய்துள்ளார். எத்தனையோ முறை சிறைக்கு சென்றிருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க முதல்வர் ஸ்டாலினுக்கு மனமில்லை. பாவப்பட்ட சமுதாயத்தில் துரைமுருகன் பிறந்திருப்பதுதான் ஒரே காரணம். வேறு வழியில்லாமல் தான், கட்சியின் பொதுச்செயலர் பதவி கொடுத்துள்ளனர். இனியும், வன்னியர்களுக்கு தனி உள்ஒதுக்கீடு வழங்கவில்லை என்றால், தமிழகத்தில் மாபெரும் போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.