அன்புமணிக்கு ராமதாஸ் 'நோட்டீஸ்'; பதிலளிக்காவிட்டால் நடவடிக்கை
அன்புமணிக்கு ராமதாஸ் 'நோட்டீஸ்'; பதிலளிக்காவிட்டால் நடவடிக்கை
ADDED : ஆக 19, 2025 04:58 AM

சென்னை: அன்புமணியிடம் விளக்கம் கேட்டு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சார்பில், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில், அன்புமணி தலைமையில் கடந்த 9ம் தேதி நடந்த பா.ம.க., பொதுக்குழுவில், அவரது தலைவர் பதவியை, ஓராண்டுக்கு நீட்டித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், புதுச்சேரியில் நேற்று முன்தினம் நடந்த பா.ம.க., சிறப்பு பொதுக்குழுவில், ராமதாசே, கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக இருப்பார் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த கூட்டத்தில், பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி, ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கையை சமர்ப்பித்தார். அதில், 2024 டிசம்பர் 28ல் நடந்த பொதுக்குழுவில் மைக்கை துாக்கி போட்டு, ராமதாசை எதிர்த்து பேசியது; பனையூரில் தனி அலுவலகம் அமைத்தது; ராமதாஸ் கூட்டிய கூட்டத்திற்கு மாவட்டச் செயலர்களை வரவிடாமல் தடுத்தது உட்பட, அன்புமணி மீது, 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு, ராமதாஸ் சார்பில் அன்புமணிக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'குற்றச்சாட்டுகளுக்கு ஏழு நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்; இல்லையேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறப்பட்டுள்ளது.