பாமக அலுவலக முகவரி மாற்றம் ராமதாசுக்கு தெரியும்: அன்புமணி தரப்பு பதிலடி
பாமக அலுவலக முகவரி மாற்றம் ராமதாசுக்கு தெரியும்: அன்புமணி தரப்பு பதிலடி
ADDED : செப் 16, 2025 08:53 PM

சென்னை: '' பாமக அலுவலக முகவரி மாற்றம் செய்தது ராமதாஸ் மற்றும் கட்சியினருக்கு தெரியும். தேர்தல் கமிஷன் அங்கீகாரத்தை நீர்த்து போகச் செய்வதற்காக இப்படி குற்றம்சாட்டுகின்றனர்,'' என அக்கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பை சேர்ந்த வழக்கறிஞர் கே.பாலு பதிலடி கொடுத்துள்ளார்.
இன்று மாலை தைலாபுரத்தில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து கே.பாலு கூறியதாவது: அன்புமணி தரப்பை சேர்ந்த வழக்கறிஞர் பாலு கூறியதாவது: அன்புமணியை அங்கீகரித்து தேர்தல் கமிஷனிடம் இருந்து கடிதம் வந்ததும், ராமதாஸ் பின்னால் இருக்கும் பூசாரிகளுக்கு பதற்றம் ஏற்பட்டுவிட்டது. என்ன பேசுகிறோம், சொல்கிறோம் என தெரியாமல் பல்வேறு கருத்துகளை கூறினர். அருள் உளறுகிறார். அவர் தொடர்ந்து உளறுவது அனைவருக்கும் தெரியும். அவருக்கு பதில் சொல்லக்கூடாது என நாங்கள் நிதானமாக அமைதி காத்தோம்.ஆனால், கவுரவ தலைவர் ஜி.கே. மணி பல குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். முகவரி மோசடியை நேற்று தான் பார்த்தோம். வெளியில் தெரியாமல் மாற்றி உள்ளதாக ஜி.கே. மணி கூறினார். பாமகவினர் தெளிவாக உள்ளனர். அன்புமணி தலைமையில் கட்சி இயங்குகிறது என உறுதியாக இருக்கின்றனர்.தேர்தல் கமிஷன் கொடுத்த பல கடிதங்கள் திநகர் முகவரிக்கு தான்வந்துள்ளது. அன்புமணி மீது கூறிய 16 குற்றச்சாட்டுகளில் ஒன்று, தேர்தல் அலுவலகம் மாற்றிவிட்டது என்பது.கட்சி அலுவலகம் மாற்றியது ராமதாசுக்கும், கட்சியினருக்கும், தெரியும். அலுவலக மாற்றம் குறித்து2013 ல் ஜிகே மணி கடிதம் கொடுத்து உள்ளார். அதை எப்படி கொடுத்தீர்கள். யார் அந்த அதிகாரம் கொடுத்தது. யார் ஒப்புதலோடு கொடுத்தீர்கள். அலுவலக மாற்றம் என மோசடி என வெளியில் பேசுவது கவுரவத் தலைவருக்கு கவுரவமா?அன்புமணி தானாக முன்வந்து தனது வீட்டை கட்சி அலுவலகமாக மாற்றிக் கொள்ள அனுமதி கொடுத்தார். நேற்று கிடைத்த அங்கீகாரத்தை நீர்த்துபோகச் செய்வதற்காக அலுவலக மாற்றம் என்கிறீர்கள்.
பொதுக்குழு தீர்மானம்
பொதுக்குழு நடத்துவதற்கு நிறுவனர் ஒப்புதல் பெற வேண்டும் என கட்சி விதி எண் 13 ஐ மணி கூறுகிறார். அதில், நிறுவனர் ஒப்புதல் பெற வேண்டும் என்பது அல்ல. நிறுவனர் அழைக்கப்பட்டு, அவர் வழிகாட்டுதல்படி கூட்டம் நடத்த வேண்டும் என்று உள்ளது. மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு முன்னர் ராமதாசுக்கு இமெயில் மூலமும், தபால் மூலமும் கடிதம் அனுப்பினோம். பொதுக்குழுவில் தனியாக இருக்கை அமைத்தோம். ஆனால், பொதுக்குழு முடிந்த பிறகு, தனக்கு அழைப்பு இல்லை என ராமதாஸ் கூறவில்லை. அவர் அப்படி கூற மாட்டார். நிறுவனர் ஒப்புதல் பெற வேண்டும் என்ற விதி எங்கு உள்ளது. ஜி.கே.மணி அவதூறான செய்திகளை சொல்லலாமா?தலைவர் பதவிக்காலம் முடிந்துவிட்டால், அதிகாரம் நிறுவனருக்கு சென்றுவிடும் என்ற விதி எங்கு உள்ளது. ஆனால், ஜி.கே.மணி தொடர்ச்சியாக பல ஆண்டுகள் தலைவர் பதவியில் இருந்துள்ளார். தலைவர் அதிகாரம் , நிறுவனருக்கு சென்றுவிடும் என்ற விதி எங்கு உள்ளது. தலைவர், பொருளாளர், செயலாளர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடத்த முடியவில்லை என்றால், அடுத்து தேர்தல் நடத்தப்படும் வரை பதவியில் தொடரலாம் என்பது விதி. இதேபோன்று, ஜிகே மணி தலைவராக இருந்த போது பல முறை கடிதம் கொடுத்து பதவியில் நீடித்துள்ளார்.
ராமதாஸ் நடத்தியது பொதுக்குழுவே இல்லை. அதில் காலநீட்டிப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. குழந்தைகளை ஏமாற்றுவது போன்று ஏமாற்ற வேண்டாம். அவர்கள் இப்படி செய்வது ராமதாஸ் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ராமதாஸ் நிறுவனர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அன்புமணி கைகளில் கட்சி முழுமையாக வந்துள்ளது. எந்த குற்றச்சாட்டை வைத்தாலும் அது நியாயமானதாகவும், சரியானதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

