ஆசிரியர்கள் பிரச்னைக்கு தீர்வு ராமதாஸ் புது யோசனை
ஆசிரியர்கள் பிரச்னைக்கு தீர்வு ராமதாஸ் புது யோசனை
ADDED : ஜன 26, 2026 02:47 AM

சென்னை: 'தமிழக அரசு, அனைத்து துறை அலுவலர்கள் அடங்கிய குழு அமைத்து, போராடுவோருக்கு அவர்களின் நியாயமான உரிமையை அளித்து, பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., தேர்தல் வாக்குறுதி 309-ன்படி, ஜன., 3-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக அரசு அறிவித்துள்ள புதிய ஓய்வூதிய திட்டம் வாயிலாக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநில அரசு அலுவலர்களின் கடைசி மாத ஊதியத்தில், 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதை, ஜாக்டோ ஜியோ மற்றும் போட்டா ஜியோ அமைப்புகள் வரவேற்று, போராட்டத்தை ஒத்தி வைத்தன. ஆனால், பல்வேறு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள், இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிதாக ஆக்டோ ஜியோ என்ற அமைப்பை உருவாக்கி, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 3-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்துவதாக அறிவித்துள்ளன.
அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம், ஊராட்சி செயலர்கள் போராட்டம் என, அனைவரும் தங்களின் உரிமையை கேட்டு போராடிக் கொண்டிருக்கின்றனர். எனவே, தமிழக அரசு அனைத்து துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் அடங்கிய குழு அமைத்து, போராடுவோருக்கு நியாயமான உரிமையை அளித்து, நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

