அரசியல் செய்ய வயது தடையில்லை; கருணாநிதியை ஒப்பிட்டு ராமதாஸ் கருத்து
அரசியல் செய்ய வயது தடையில்லை; கருணாநிதியை ஒப்பிட்டு ராமதாஸ் கருத்து
ADDED : ஜூன் 09, 2025 04:41 AM

சென்னை : அரசியலுக்கு வயது கிடையாது; அன்புமணியுடன் பேசியது ரகசியம்; நல்ல செய்தி விரைவில் வரும் என, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அரசியலுக்கு வயது கிடையாது. கருணாநிதி 95 வயது வரை அரசியலில் இருந்தார். சக்கர நாற்காலியில் அமர்ந்து முதல்வராக செயல்பட்டார். உலக அளவில் மகாதீர் முகமது 92 வயதில், மலேஷியாவின் பிரதமராக இருந்தார். அதனால், அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வயது கிடையாது. வயது என்பது வெறும் எண் மட்டுமே.
விரைவில் நல்ல செய்தி வரும். நான் சென்னையில் இருக்கும் போது வருமா, தைலாபுரம் தோட்டம் சென்ற பிறகு வருமா என்பது தெரியாது. நான் பல தலைவர்களோடு, பிரதமர்களோடு நெருங்கி பழகியிருக்கிறேன். பிரதமர் மோடி எனது நெருங்கிய நண்பர்.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, நான் சந்தித்தது இல்லை. ஆனால், அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தியாவை உலகின் முதல் நாடாக்க பிரதமர் மோடியும், அமித் ஷாவும் இணைந்து செயல்படுகின்றனர். அதனால், அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.
பா.ம.க.,வில் நடக்கும் குழப்பங்களால் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு சோர்வு வராது. அவர்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி விரைவில் வரும்.
கூட்டணி யாரோடு, எப்போது எப்படி அமையும் என்பதை, இப்போது சொல்ல முடியாது. இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் தெரிய வரும். தேசிய கட்சி, மாநில கட்சி என எந்த கட்சியுடனும் வேண்டுமானாலும் கூட்டணி இருக்கலாம்.
ஆடிட்டர் குருமூர்த்தியை தைலாபுரத்திலும் சந்தித்தேன்; சென்னையிலும் சந்தித்தேன். தைலாபுரத்தில் அன்புமணியுடன் பேசியது ரகசியம். அதை இப்போது சொல்ல முடியாது. நேரம் வரும்போது தானாகவே அது வெளிப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- ராமதாஸ், நிறுவனர், பா.ம.க.,

