பா.ம.க., அன்புமணியுடன் இணைந்த ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகள்
பா.ம.க., அன்புமணியுடன் இணைந்த ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகள்
ADDED : ஜூலை 17, 2026 06:49 AM

சென்னை: பா.ம.க., பிளவுபட்டிருந்தபோது, ராமதாஸ் நியமித்த கட்சி நிர்வாகிகள், தற்போது கட்சி ஒன்றிணைந்த நிலையில், அன்புமணி தலைமையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் கட்சி தலைவருமான அன்புமணி இடையே மோதல் இருந்தபோது, இருவரும் தனித்தனியே, கட்சி நிர்வாகிகளை நியமித்தனர். தற்போது, மோதல் முடிவுக்கு வந்து, இருவரும் சமரசமாகி உள்ளனர்.
இதையடுத்து, ராமதாஸ் நியமித்த மாநில, மாவட்ட நிர்வாகிகளையும், தான் நியமித்த நிர்வாகிகளையும் அன்புமணி தொடர்ந்து சந்தித்து வருகிறார். அந்த வகையில், சென்னை பனையூரில் உள்ள, பா.ம.க., அலுவலகத்தில், ராமதாசால் நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளை, அன்புமணி நேற்று சந்தித்தார்.
அவர்களிடம் அன்புமணி கூறியதாவது:
தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்கு பிறகு, மாற்றம் நிகழ்ந்துள்ளது. நம்மிடம் ஏராளமான திறமைகளும், செயல்திட்டங்களும் உள்ளன. வரும் காலத்தில், ராமதாசின் கனவுகளை, செயல்திட்டங்களை செயல்படுத்துவோம்.
தேர்தலின்போது, என்னுடன் பயணம் செய்தவர்களும், ராமதாசுடன் பயணம் செய்தவர்களும் ஒருங்கிணைந்து, இனிமேல் செயல்பட வேண்டும்.
வரும் உள்ளாட்சி தேர்தலில், பா.ம.க.,வினர் உரிய பிரதிநிதித்துவம் பெற வேண்டும். செயலர், பொருளாளர், இளைஞரணி, மகளிர் அணி என, புதிய பட்டியல் தயார் செய்ய வேண்டும். அனைவருக்கும் உரிய அங்கீகாரம் தரப்படும். டிஜிட்டல் வடிவில், புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது; நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
