ADDED : ஜன 21, 2025 06:27 PM
சென்னை:பா.ம.க., நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்திக்க, வரும் 25ம் தேதி முதல் சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக, அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்,'வரும் 25, 26, 27ம் தேதிகளில், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இரு மாவட்டங்களின் பா.ம.க., நிர்வாகிகள், தொண்டர்களை சந்திக்க உள்ளேன்' என தெரிவித்துள்ளார்.
பா.ம.க., இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி, 2022 மே 28ல் அக்கட்சி தலைவரானார். மகன் தலைவரான பிறகும், ராமதாஸ் வழக்கம்போல் திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் இருந்து கட்சியை நடத்தி வருகிறார். ஒன்றிய அளவிலான நிர்வாகிகளை கூட, அவரே நியமனம் செய்கிறார்.
இதனால் தந்தை -- மகன் இடையே நிலவி வந்த பனிப்போர், கடந்த ஆண்டு டிசம்பர் 28ல், புதுச்சேரியில் நடந்த பா.ம.க., பொதுக்குழுவில் வெளிச்சத்திற்கு வந்தது. அதன் பின், சென்னை, பனையூரில் உள்ள அலுவலகத்தில், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலர்களை, தினமும் அன்புமணி தனியாக சந்தித்து வருகிறார். இந்நிலையில், நிர்வாகிகள், தொண்டர்களை நேரில் சந்திக்க, வரும் 25 முதல் சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாக, ராமதாஸ் அறிவித்திருப்பது, அக்கட்சியினரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.