ADDED : ஜூலை 23, 2026 06:13 AM

சென்னை: பா.ம.க., தலைவராக தன்னை அறிவிக்கக் கோரி, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் திரும்ப பெற்றார்.
சட்டசபை தேர்தலுக்கு முன், பா.ம.க.,வில், கட்சி தலைமைக்கான உரிமை தொடர்பாக, நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சி தலைவருமான அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது. மேலும், இரண்டு அணியாக கட்சி செயல்பட்டது.
தன்னை பா.ம.க., தலைவராக அறிவிக்க கோரியும், பா.ம.க.,வின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த, அன்புமணிக்கு தடை விதிக்க கோரியும், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், ராமதாஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.
இந்நிலையில், ராமதாஸ், அன்புமணி இடையே சமரசம் ஏற்பட்டு, கட்சியும் ஒன்றிணைந்து உள்ளது.
இதையடுத்து, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை திரும்பப் பெறுவதாக, ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்ற உரிமையியல் நீதிமன்றம், வழக்கை திரும்பப் பெற அனுமதித்து, வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டது.
