நீக்கப்பட்ட 3 எம்.எல்.ஏ.,க்களிடம் விளக்கம் கேட்டு ராமதாஸ் கடிதம்
நீக்கப்பட்ட 3 எம்.எல்.ஏ.,க்களிடம் விளக்கம் கேட்டு ராமதாஸ் கடிதம்
ADDED : ஜூலை 23, 2025 03:17 AM
திண்டிவனம்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவருடைய மகன் அன்புமணி இடையே நிலவும் மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
கட்சி நிர்வாகிகளை ராமதாஸ் நீக்குவதும், அவர்களுக்கு அன்புமணி பொறுப்புகள் வழங்குவதும்; இதன் தொடர்ச்சியாக ராமதாஸ் நியமித்த நிர்வாகிகளை அன்புமணி நீக்குவதும், அன்புமணி நியமித்த நிர்வாகிகளுக்கு பதில், ராமதாஸ் புதிய நிர்வாகிகளை நியமிப்பது என மாறி மாறி நடக்கிறது.
இந்நிலையில், அன்புமணி ஆதரவாளர்களான மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார், மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், தர்மபுரி எம்.எல்.ஏ.,வெங்கடேஸ்வரன் ஆகியோர் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக, கட்சி உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவதாக ராமதாஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, அவர்கள் மூன்று பேரும் ஒழுங்கு நடவடிக்கை குழு முன் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ராமதாஸ் உத்தரவின் பேரில், கட்சியின் தலைமை நிலைய செயலர் அன்பழகன் அறிவித்துள்ளார். இதற்கான கடிதம் மூவருக்கும் தனித்தனியாக அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து மயிலம் சிவக்குமார் கூறுகையில், “பா.ம.க., தலைவர் அன்புமணியிடம் தெரிவித்து, அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி நடப்போம்,” என, கூறினார்.

