தீர்ப்பாய உத்தரவை செயல்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்
தீர்ப்பாய உத்தரவை செயல்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்
ADDED : ஜன 23, 2025 02:01 AM
சென்னை:'பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, சாத்துார் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த, 27 பேரின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
விருதுநகர் மாவட்டம், சாத்துாரில் உள்ள பட்டாசு ஆலையில், கடந்த 2021 பிப்ரவரி மாதம் 12ல் நடந்த வெடி விபத்தில், 27 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா, 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றமும் இதை உறுதிப்படுத்தியது. ஆனாலும், இழப்பீடு வழங்காமல் தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது.
அந்த விபத்தில் தாய், தந்தை ஆகிய இருவரையும் இழந்த நந்தினி என்ற 15 வயது சிறுமி தவித்துக் கொண்டிருக்கிறார். பல குழந்தைகள், தந்தையை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
எனவே, தமிழக அரசு மனிதநேயமின்றி செயல்படக் கூடாது. தீர்ப்பாய உத்தரவுப்படி உடனடியாக இழப்பீட்டை, நான்கு ஆண்டுகளுக்கான வட்டியுடன் வழங்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் அடிக்கடி பட்டாசு விபத்துகள் ஏற்படுவதால், அங்கு சிறப்பு மருத்துவமனை அமைக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.