கும்பகோணத்தில் வன்னியர் சங்க மாநாடு பலத்தை காட்ட தயாராகிறார் ராமதாஸ்
கும்பகோணத்தில் வன்னியர் சங்க மாநாடு பலத்தை காட்ட தயாராகிறார் ராமதாஸ்
ADDED : ஜன 24, 2025 08:18 PM
சென்னை:அடுத்த மாதம், 23ம் தேதி, கும்பகோணத்தில் நடைபெறவுள்ள வன்னியர் சங்க மாநாட்டில், தங்களின் பலத்தைக் காட்ட, பா.ம.க., தயாராகி வருகிறது.
பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில், சித்திரை முழுநிலவு மாநாடு நடத்தப்பட்டு வந்தது.
மாநாட்டின் போது நடந்த சட்டம்- - ஒழுங்கு பிரச்னையால், 2013க்கு பின் நடத்தப்படவில்லை. வன்னியர் சங்க தலைவராக இருந்த குரு மறைவுக்குப் பின், சங்க பணிகளிலும் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில், மாமல்லபுரத்தில் மீண்டும் சித்திரை முழு நிலவு மாநாட்டை நடத்த, இரண்டு ஆண்டுகளாக பா.ம.க., முயற்சித்து வந்தது; அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் நடத்த முடியவில்லை.
இந்நிலையில், 2026 சட்டசபை தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தும் வகையிலும், பா.ம.க., வன்னியர் சங்கத்தின் பலத்தைக் காட்டவும், அரசியல் களத்தில் கவனத்தை ஈர்க்கவும், வரும் பிப்ரவரி, 23ம் தேதி, தஞ்சை மாவட்டம் கும்ப கோணத்தில், வன்னியர் சங்கம் சார்பில், சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு நடத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், 'கும்பகோணம் வன்னியர் சங்க மாநாட்டு செய்தியை, எல்லா கிராமங்களுக்கும், பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தினர் கொண்டு செல்ல வேண்டும்.
'மாநாட்டில் பங்கேற்க இளைஞர்கள், பெண்களை தயார்படுத்துங்கள்' என்று அறிவுறுத்திஉள்ளார்.
பா.ம.க., நிர்வாகிகள் கூறியதாவது:
வன்னியர் சங்க தலைவராக குரு இருந்தவரை, சித்திரை முழுநிலவு மாநாட்டுக்காக கிராமம், கிராமமாக சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டுவார்.
அந்த மாநாடுகள், பா.ம.க.,வின் இருப்பை வெளிப்படுத்தின.
அதுபோல, கும்பகோணம் மாநாட்டிற்காக கிராமம், கிராமமாக சென்று, மக்களை சந்திக்க வேண்டும் என வன்னியர் சங்க நிர்வாகிகளுக்கு, ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த டிசம்பர், 21ம் தேதி, திருவண்ணாமலையில் நடந்த விவசாயிகள் மாநாடு வெற்றி அடைந்தது. அதைவிட பெரிய கூட்டத்தைக் கூட்டி பா.ம.க.,வின் பலத்தைக் காட்ட வேண்டும் என, ராமதாஸ் கண்டிப்புடன் கூறியுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

