மறக்க முடியாத பாடம் புகட்டப்படும் முதல்வருக்கு ராமதாஸ் எச்சரிக்கை
மறக்க முடியாத பாடம் புகட்டப்படும் முதல்வருக்கு ராமதாஸ் எச்சரிக்கை
ADDED : நவ 07, 2024 09:22 PM
சென்னை:'வன்னியர் மீதான வன்ம மனநிலையில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் அரசுக்கு, பாட்டாளி மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவர்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
கடலுார் மஞ்சக்கொல்லையில், விடுதலை சிறுத்தை கட்சியினரால் தாக்கப்பட்ட செல்லத்துரை குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற, பா.ம.க., மாவட்டச்செயலர் செல்வமகேஷ் உள்ளிட்ட, 10 பேர் மீது, எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யும் முன், முறையான விசாரணை நடத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியுள்ளது. அவற்றை மதிக்காமல், வி.சி., கட்சியினரால் தாக்கப்பட்ட தரப்பினர் மீதே, காவல் துறை வன்கொடுமை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதை பார்க்கும்போது, இந்த ஒட்டுமொத்த சதியிலும், காவல் துறையும் பங்காளியாக இருக்குமோ என்று சந்தேகம் ஏற்படுகிறது.
வன்னியர்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தட்டி கேட்க வேண்டிய முதல்வர் ஸ்டாலின், கோவையில் செந்தில் பாலாஜியின், 'கம்பேக்'கை கொண்டாடிக் கொண்டிருக்கிறார். காவல் துறையினரின் செயல்பாடுகளை பார்க்கும்போது, தமிழகத்தில் நடப்பது, களப்பிரர்கள் ஆட்சியின் நீட்சியாகவே தோன்றுகிறது.
கடந்த 1989ல், வன்னியர்களுக்கு எதிரான வன்முறைகளை, அன்றைய முதல்வர் கருணாநிதி கட்டவிழ்த்து விட்டார். அன்று தந்தை செய்ததை, இன்று மகன் செய்கிறார். தி.மு.க., அரசின் அடக்குமுறைகளையும், பொய் வழக்குகளையும் முறியடிக்கும் திறனும் உறுதியும், பா.ம.க.,வுக்கு உண்டு.
வன்னியர்களுக்கு எதிராக தாக்குதல்களை கட்டவிழ்த்து விடும் கும்பலை, வன்னியர் மீதான வன்ம மனநிலையுடன் ஆதரிக்கும் முதல்வர் ஸ்டாலின் அரசுக்கு, பாட்டாளி மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.