ராமேஸ்வரம் சூழலியல் சுற்றுலா: தயாராகிறது திட்ட அறிக்கை
ராமேஸ்வரம் சூழலியல் சுற்றுலா: தயாராகிறது திட்ட அறிக்கை
ADDED : பிப் 12, 2025 12:26 AM
சென்னை:ராமேஸ்வரத்தில் சூழலியல் சுற்றுலாவுக்கான வசதிகளை, 15 கோடி ரூபாயில் ஏற்படுத்துவதற்கான, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், ஆன்மிக தலம் மட்டுமின்றி, சுற்றுலா பயணியரை ஈர்க்கும் இடமாகவும் உள்ளது. இங்கு இயற்கை சார்ந்த சூழலியல் சுற்றுலா திட்டங்களை செயல்படுத்த, வனத்துறை முடிவு செய்தது.
வனத்துறை வாயிலாக, மன்னார் வளைகுடா மற்றும் ராமேஸ்வரம் தீவை அடிப்படையாக வைத்து, சூழலியல் சுற்றுலா திட்டம், 15 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என, கடந்த ஆண்டு அரசு அறிவித்தது.
இதற்கான நடவடிக்கைகளை வனத்துறை முடுக்கி விட்டுள்ளது.
இதுகுறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ராமேஸ்வரம் தீவு, மன்னார் வளைகுடா ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில், பல்லுயில் சார்ந்த விஷயங்களை பொதுமக்கள் அறிய, புதிய சூழலியல் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கடல் வளம் மற்றும் கடல்சார் உயிரினங்கள் குறித்த விபரங்களை, பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்ள, இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
வனத்துறை மட்டுமல்லாது, உள்ளூர் மக்கள் பங்கேற்புடன், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இது, நாடு முழுதும் இருந்து வரும் சுற்றுலா பயணியரை ஈர்க்கும் வகையில் அமையும்.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன. நிறுவன தேர்வு முடிந்தவுடன், அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதேபோன்று, நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை, சிறப்புமிக்க பறவைகள் சரணாலயமாக உள்ளது.
இங்கு ஒருங்கிணைந்த பல்லுயிர் விளக்க மையம் அமைக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியும் தற்போது துவங்கிஉள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

