ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் காலிப்பணியிடங்களை நிரப்ப வழக்கு
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் காலிப்பணியிடங்களை நிரப்ப வழக்கு
ADDED : அக் 24, 2024 07:12 AM

மதுரை : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் குருக்கள் உள்ளிட்ட அனைத்து காலிப் பணியிடங்களை நிரப்ப தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
சென்னை வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனு:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மூலவருக்கு பூஜை செய்ய 12 குருக்கள் இருக்க வேண்டும். தற்போது 2 பேர்தான் உள்ளனர்.
நடை திறப்பு, நடை சாத்தும் பணியில் மணியம் பதவியில் 3 பேர் இருக்க வேண்டும். அப்பணியிடம் காலியாக உள்ளது. பதிலாக தற்போது கோயில் செயல் அலுவலரே மணியம் பதவிக்குரிய பணியை நிறைவேற்றுகிறார். உச்சிகால பூஜை நடைபெறுவதில்லை. வேதபாராயணம் செய்வோர் இல்லை. மொத்தம் 75 குருக்கள் இருக்க வேண்டும். தற்போது 23 பேர்தான் உள்ளனர்.
அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்பக்கோரி அறநிலையத்துறை செயலர், கமிஷனர், கோயில் செயல் அலுவலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: ஆகம கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தற்போதைய நிலை தொடர அந்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இக்கோயிலில் நியமனம் மேற்கொள்ள இயலவில்லை.
இவ்வாறு தெரிவித்தது.
இதை பதிவு செய்த நீதிபதிகள்: மனுதாரர் உச்சநீதிமன்றத்தை நாடி நிவாரணம் தேடலாம். இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

