ஸ்ரீவி., ஜீயர் குறித்து அவதுாறு ரங்கராஜன் நரசிம்மன் கைது
ஸ்ரீவி., ஜீயர் குறித்து அவதுாறு ரங்கராஜன் நரசிம்மன் கைது
ADDED : டிச 26, 2024 04:48 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ராமானுஜ ஜீயர் குறித்து சமூக வலைதளத்தில் அவதுாறாகப் பேசிய புகாரில், சென்னை புழல் சிறையில் இருக்கும் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஜூன் 17ல் நடந்த ராமானுஜர் புத்தக வெளியீட்டு விழாவில் ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ராமானுஜ ஜீயர் பங்கேற்றார்.
அவர் குறித்து சமூக வலைதளம் மூலம் அவதுாறு கருத்து வெளியிட்டதாக, ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் மடத்தின் செயலர் சக்திவேல்ராஜன் போலீசில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரில் ரங்கராஜன் நரசிம்மன், பெலிக்ஸ் ஜெரால்டு, களஞ்சியம் ஆகியோர் மீது ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
ஸ்ரீபெரும்புதுார் ஜீயர் புகாரில் கைது செய்யப்பட்ட ரங்கராஜன் நரசிம்மன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்துாரில் பதிவு செய்த வழக்கில், நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் போலீசார் பிடிவாரன்ட் பெற்றனர். அதையடுத்து ஸ்ரீவில்லிபுத்துார் தனிப்படை போலீசார் நேற்று ரங்கராஜன் நரசிம்மனை சென்னை புழல் சிறையில் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றத்தின் தற்போதைய பொறுப்பு நீதிபதியாக, சிவகாசி நீதிமன்ற நீதிபதி இருப்பதால், அங்கு அவர் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.