அனைத்து படிப்பையும் அறிந்து கொள்ள அரிய வாய்ப்பு: 'தினமலர்' உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி இன்றே கடைசி
அனைத்து படிப்பையும் அறிந்து கொள்ள அரிய வாய்ப்பு: 'தினமலர்' உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி இன்றே கடைசி
ADDED : மார் 25, 2024 05:29 AM

சென்னை : உயர்கல்விக்கு ஆலோசனை தரும் 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. அனைத்து வகை படிப்புகள் குறித்தும் கல்வியாளர்களிடம் ஆலோசனை பெற, இன்று(மார்ச் 25) அரிய வாய்ப்பாகும்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு, உயர்கல்வியில் சேர்வதற்கான ஆலோசனைகளை வழங்க, 'தினமலர்' நாளிதழ் சார்பில், வழிகாட்டி நிகழ்ச்சி, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சியை, 'தினமலர்' நாளிதழுடன், கோயம்புத்துார் ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழுமம் இணைந்து நடத்துகிறது.
இந்த நிகழ்ச்சி, நேற்று முன்தினம் சென்னை கலைவாணர் அரங்கில், கோலாகலமாக துவங்கியது. இந்த நிகழ்ச்சியில், பிளஸ் 2வுக்கு பின், என்ன படிக்கலாம், எங்கே படிக்கலாம் என்ற குழப்பங்களுக்கு தீர்வு காண, மாணவர்களும், பெற்றோரும் ஆர்வமாக குவிந்தனர்.
நேற்று இரண்டாம் நாளாக, உயர்கல்வி கருத்தரங்கம், கண்காட்சி நடந்தது. இதில், கல்வியாளர்கள் பங்கேற்று, மாணவர்களின் உயர்கல்வி சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர்.
காமர்ஸ் மற்றும் மேனேஜ்மென்ட் படிப்புகள், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., செயற்கை நுண்ணறிவு படிப்புகள், 21ம் நுாற்றாண்டில் மாணவர்கள் வளர்க்க வேண்டிய திறன்கள், இன்ஜினியரிங் எதிர்காலம், மெஷின் லேர்னிங், ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன், உடனடி வேலை வழங்கும் படிப்புகள் ஆகியவை குறித்து, கல்வி ஆலோசகர்கள் விரிவான விளக்கம் அளித்தனர்.
உயர்கல்வி படிப்புகள் குறித்த மாணவர்களின் ஆர்வங்களை அறிந்து கொள்ளும் வகையில், அவர்களிடம் கேள்விகள் கேட்டு, சிறந்த பதில் அளித்தவர்களுக்கு, லேப்டாப், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் பரிசாக வழங்கப்பட்டன.
இன்று மூன்றாம் நாளுடன் வழிகாட்டி நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையில், கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடக்கிறது.
பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் பெற்றோர், அனைத்து வகை படிப்புகள் குறித்தும், ஆலோசனைகளை நேரில் பெற இன்றைய நிகழ்ச்சியை தவறவிடாமல், தெரிந்து கொள்ள அரிய வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.

