நெல்லையில் கல்லூரி மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல்: கேண்டீன் உரிமம் ரத்து
நெல்லையில் கல்லூரி மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல்: கேண்டீன் உரிமம் ரத்து
ADDED : அக் 10, 2025 11:22 AM

நெல்லை: நெல்லையில் தனியார் கல்லூரியில் பலருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
நெல்லை மாவட்டம் திடியூரில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்று உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த கல்லூரி மாணவர்களில் சிலருக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மாணவர்களுக்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில் எலிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தது. அவர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
இந் நிலையில், கல்லூரியின் விடுதி வளாகத்தில் சுகாதாரத் துறையினர் ஆய்வு நடத்தினர். அப்போது சுகாதாரமில்லாத தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருவதை கண்டறிந்தனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விடுதி உணவகத்தில் ஆய்வு நடத்தியதில் பல்வேறு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும், சமையலுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் சுத்தமின்றி இருந்ததையும், கல்லூரி வளாகத்தின் பின்புறம் உள்ள வெள்ளநீர் ஓடையில் இருந்து நீரை எடுத்து வந்து சமையலுக்கு பயன்படுத்தியதும் தெரிய வந்தது.
சுகாதாரக்கேடான தண்ணீரை குடித்ததால் மாணவர்கள் பாதிப்புக்கு ஆளானதும் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வந்த 2 கேண்டீன்கள் உரிமத்தை ரத்து செய்து அதை மூடவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
மேலும் தண்ணீர் தொட்டி, கல்லூரி சமையல் அறை ஆகியவற்றை முறையாக புதுப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு மறு உத்தரவு வரும் வரை கல்லூரியை மூடவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு இருக்கின்றனர்.