தமிழகத்தில் எலி காய்ச்சல் அதிகரிப்பு மழைநீரில் வெறும் காலில் நடக்காதீர் பொது சுகாதாரத்துறை அறிவுரை
தமிழகத்தில் எலி காய்ச்சல் அதிகரிப்பு மழைநீரில் வெறும் காலில் நடக்காதீர் பொது சுகாதாரத்துறை அறிவுரை
ADDED : அக் 25, 2025 01:11 AM
சென்னை: 'மழைப்பொழிவு தீவிரமடைந்து இருப்பதால், 'லெப்டோ ஸ்பைரோசிஸ்' எனப்படும், எலி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, தேங்கியுள்ள மழைநீரில், வெறும் காலில் நடக்க வேண்டாம்' என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
சுழல் வடிவ நுண்ணுயிரியான, 'லெப்டோஸ்பைரா' எனப்படும் பாக்டீரியாவால், எலி காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா விலங்குகளுக்கு பரவி, அவற்றின் வாயிலாக, மனிதர்களிடம் தொற்றிக் கொள்ளும் நோயாகும். இது, சிறுநீரகம் மற்றும் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
நாய்கள், பன்றிகள், கால்நடைகளின் சிறுநீர் வாயிலாகவும், குறிப்பாக எலிகளின் கழிவு வாயிலாகவும், மனிதர்களுக்கு இந்த நோய் பரவுகிறது.
பொதுவாக மழைப்பொழிவுக்கு பின், நோய் பாதிப்பு அதிகரித்து காணப்படும். நாடு முழுதும் ஒவ்வொரு ஆண்டும், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர், எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதை தடுக்க மத்திய அரசு, 'லெப்டோ ஸ்பைரோசிஸ்' தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான திட்டத்தை, தமிழகம், குஜராத், கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களிலும், அந்தமான் - நிகோபர் தீவுகளிலும் துவக்கியது.
எலி காய்ச்சல் நோயை கண்டறிய, மத்திய அரசால் சென்னையில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகம் உட்பட, 10 ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இங்கு எலி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
எலி காய்ச்சல் பாதிப்பை உறுதிப்படுத்த, 'ஆர்.டி.பி.சி.ஆர்.,' பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறது. தமிழகத்தில், 2021ல், 1,046 பேருக்கு எலி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. அந்த எண்ணிக்கை, 2022ல், 2,612 ஆகவும், 2023ல் 3,002 ஆகவும் அதிகரித்தது.
கடந்த ஆண்டில் 2,000க்கும் அதிகமானோருக்கு எலி காய்ச்சல் கண்டறியப்பட்டது. இந்த ஆண்டில் இதுவரை, 1,500க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு உள்ள மாவட்டங்களில், மருத்துவ கண்காணிப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தேவைப்படும் இடத்தில், நடமாடும் மருத்துவ முகாம் கள் நடத்தப்படுகின்றன.
பொதுமக்கள், தேங்கியிருக்கும் மழை நீரில் வெறும் கால்களில் நடக்கக் கூடாது. தொற்று உள்ள உயிரினங்களின் கழிவுகள், மழை நீரில் கலந்திருக்கக் கூடும். அதில், கால் வைத்தால், நம் உடலிலும் தொற்று ஊடுருவ வாய்ப்புள்ளது.
எனவே, விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியம். வெளியே சென்று வந்த பின், கை, கால்களை நன்னீரில் நன்றாக சோப்பு போட்டு அலச வேண்டும். முடிந்தால் குளிப்பது சிறந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

