ADDED : ஆக 24, 2025 01:35 AM
சென்னை:வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்துக்காக, கூட்டுறவு சங்கங்களுக்கு, போக்குவரத்து செலவு மற்றும் இறக்கு கூலி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளில், ரேஷன் பொருட்கள் நேரடியாக வழங்கும் திட்டத்தை, இம்மாதம் முதல் தமிழக அரசு துவக்கியுள்ளது. மாநிலம் முழுதும், 21.70 லட்சம் பயனாளிகள் வீடுகளுக்கு, மாதம்தோறும் இரண்டாவது சனிக் கிழமை, ஞாயிற்று கிழமைகளில், ஊழியர்கள் பொருட்களை வினியோகம் செய்வர்.
இதற்காக, ஒரு கார்டுதாரருக்கு பொருட்களை வழங்க, கூட்டுறவு சங்கங்களுக்கு போக்குவரத்து செலவு, ஏற்று கூலி மற்றும் இறக்கு கூலியை, அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, ஒரு கார்டுக்கு ஊரக பகுதிகளுக்கு, 40 ரூபாய், நகரத்துக்கு, 36 ரூபாய், மலை பகுதிக்கு, 100 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ஆண்டுக்கு, 31 கோடி ரூபாயை, சங்கங்களுக்கு அரசு வழங்கும்.

