ரேஷன் கடை மளிகை பொருட்களுக்கு வெளி மார்க்கெட்டை விட அதிக விலை; கொந்தளிக்கும் பணியாளர்கள் சங்கம்
ரேஷன் கடை மளிகை பொருட்களுக்கு வெளி மார்க்கெட்டை விட அதிக விலை; கொந்தளிக்கும் பணியாளர்கள் சங்கம்
ADDED : அக் 21, 2024 11:05 PM

வடமதுரை: '' ரேஷன்கடைகளில் வெளி மார்க்கெட்டை விட அதிக விலைக்கு மளிகை பொருட்கள் விற்கப்படுவதாக,'' தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் பி.ஏ.முருசேகன் கூறினார்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் அவர் பேசியதாவது:
ரேஷன் கடையில் அதிகாரிகள் ஆய்வின் போது பொருட்களின் அளவு குறைவாக இருந்தால் இரு மடங்கு அபராதம் விதிப்பது நியாயமற்ற விதிமுறை. மளிகை பொருட்களை பொதுமக்களுக்கு கட்டாயப்படுத்தி விற்க கூடாது என நிபந்தனை விதித்துவிட்டு 100 வித மளிகை பொருட்களை அதிகாரிகளே அனுப்பி வைக்கின்றனர்.
இப்பொருள் விற்றாலும் விற்காவிடினும் குறித்த தேதியில் சங்கத்தில் இருந்து பணம் எடுத்து கொள்ளப்படுகிறது. சில பொருட்கள் காலாவதி தேதி முடிந்தாலும் திரும்ப ஒப்படைக்கும் வசதி இல்லை என்பதால் நஷ்டம் விற்பனையாளரை சேர்கிறது. அதோடு மளிகை பொருட்கள் விலை என்பது வெளி மார்க்கெட்டில் கிடைப்பதை விட கூடுதலாக உள்ளது.
இதை எப்படி பொதுமக்கள் ரேஷன் கடையில் வாங்குவர். பெண்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டவர்களும் விற்பனையாளர்களாக பணிபுரியும் நிலையில் நீண்ட தொலைவிற்கு இடம் மாற்றுவது மிகுந்த துன்புறுத்தலான செயலாக உள்ளது. கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். அதுவரை யாரும் பணிக்கு செல்ல மாட்டோம் என்றார்.