குடோன்களில் கம்ப்யூட்டருடன் எடை தராசை இணைக்க வேண்டும்; ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டம்
குடோன்களில் கம்ப்யூட்டருடன் எடை தராசை இணைக்க வேண்டும்; ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டம்
ADDED : ஏப் 08, 2025 03:59 AM

மதுரை: ரேஷன் கடைகளுக்கு கம்ப்யூட்டருடன் எடை தராசை இணைப்பதற்கு முன்பாக, நுகர்பொருள் வாணிப கழக (டி.என்.சி.எஸ்.சி.,) குடோன்களில் கம்ப்யூட்டருடன் எடை தராசை இணைக்கும் முறையை அரசு கொண்டு வரவேண்டும் என்பது உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் இன்று (ஏப்.8) மாநில அளவில் போராட்டம் நடத்துகின்றனர்.
மதுரையில் மாநிலத்தலைவர் ஜெயச்சந்திர ராஜா, துணைத்தலைவர் செல்லதுரை கூறியதாவது:
கூட்டுறவுத்துறையின் கீழ் உள்ள 32 ஆயிரம் பகுதிநேர, முழுநேர ரேஷன் கடைகளுக்கு டி.என்.சி.எஸ்.சி., குடோன்களில் இருந்து அரிசி, கோதுமை, பருப்பு, சீனி என அத்தியாவசியப் பொருட்களை சாக்குடன் சேர்த்து 50.600 கிலோ மூடையாக அனுப்ப வேண்டும். ஆனால் 47.6 அல்லது 48.600 கிலோ அளவு தான் கடைகளுக்கு வருகிறது.
லாரியில் மூடைகளுடன் ரேஷன் கடை பணியாளர்கள் வருவதால் எடை குறைவுக்கு அவர்களே காரணம் என திசை திருப்புகின்றனர். எனவே குடோனில் இருந்து சரக்கை ஏற்றும் போது கம்ப்யூட்டருடன் எடை தராசை இணைத்து அளவிட்டு அனுப்ப வேண்டும்.
ரேஷன் கடைகளில் உள்ள பி.ஓ.எஸ்., மெஷினை கம்ப்யூட்டர், எடை தராசுடன் இணைத்தால் தான் கார்டுதாரர்களுக்கு சரியான எடையில் அரிசி, பருப்பு, சீனி விநியோகிப்பதை கண்காணிக்க முடியும் என்கின்றனர் டி.என்.சி.எஸ்.சி., அதிகாரிகள். அதற்கு முன்பாக டி.என்.சி.எஸ்.சி., மண்டல மையங்களில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் மூடைகளை எடையிடுவதற்கு ஏற்ப கம்ப்யூட்டருடன் இணைந்த எடை தராசை சேர்க்க வேண்டும். மையங்களில் இருந்தே ஒவ்வொரு மூடையிலும் 2 கிலோ வீதம் குறைவாக வருகிறது.
வை-பை வசதி குறைவு
இணையதள சேவையின் 'ஸ்பீடு' குறைவாக இருப்பதால் ஒரு கார்டுதாரர் பி.ஓ.எஸ். (விற்பனை முனையம்) மெஷினில் ரேகை வைத்து பதிவு செய்யும் போது உடனடியாக அவரது விவரங்கள் கிடைக்காமல் 'நெட் இணைப்பு' சுற்றிக் கொண்டே இருக்கிறது. விற்பனை முனையத்தையும் தராசையும் இணைக்கும் போது முன்பு போல ஒரே பில்லாக அனைத்துப் பொருட்களுக்கும் போட முடியாது. அனைத்து ரேஷன் கடைகளிலும் விற்பனையாளர்களோடு எடையாளர்களை நியமிக்க வேண்டும்.
பல கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தந்த மாவட்டங்களில் இன்று (ஏப்.,8) போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர்.