ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம்; தேர்தலால் எம்.எல்.ஏ.,க்கள் அழுத்தம்
ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம்; தேர்தலால் எம்.எல்.ஏ.,க்கள் அழுத்தம்
ADDED : டிச 04, 2025 05:43 AM

சென்னை: தேர்தல் நெருங்குவதால், ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்டுமாறு, கூட்டுறவு சங்க அதிகாரிகளுக்கு, எம்.எல்.ஏ.,க்கள் நெருக்கடி அளித்து வருகின்றனர்.
கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள், 35,000 ரேஷன் கடைகளை நடத்துகின்றன.
இதில், 6,970 கடைகள் வாடகை கட்டடங்களில் செயல்படுகின்றன. இதற்கு வாடகையாக, ஆண்டுக்கு 18 கோடி ரூபாய் செலவாகிறது.
4 மாதங்கள் இதை தவிர்க்க, சொந்த கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 500 ரேஷன் கார்டுகள் உள்ள கடைக்கு, 440 சதுரடியில் 7 லட்சம் ரூபாய் செலவிலும், 500 கார்டுகளுக்கு மேல் உள்ள கடைக்கு, 550 சதுரடியில் 10 லட்சம் ரூபாய் செலவிலும் சொந்த கட்டடம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சட்டசபை தேர்தலுக்கு நான்கு மாதங்களே உள்ள நிலையில், ரேஷன் கடைகளை கட்டும்படி, அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ.,க்கள் நெருக்கடி அளித்து வருகின்றனர்.
கூட்டுறவு துறை அதிகாரிகள் கூறியதாவது:
வாடகையில் இயங்கும் ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் கட்ட, இடம் தேர்வு செய்து, அங்கு தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய கட்டடம் கட்டி தருமாறு எம்.எல்.ஏ.,க்களிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால் கண்டுகொள்ளவில்லை.
நெருக்கடி இப்போது, தேர்தலுக்கு நான்கு மாதங்களே உள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர் , காஞ்சிபுரம், திருச்சி, விழுப்புரம் மாவட்டங்களின் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்டும் பணியை, ஒரு மாதத்திற்குள் துவக்கும்படி அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.
இந்த வேகத்தை ஓராண்டிற்கு முன் காட்டியிருந்தால் சொந்த கட்டடம் கட்டியிருக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

