மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை கருணை அல்ல; உரிமை: முதல்வர்
மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை கருணை அல்ல; உரிமை: முதல்வர்
ADDED : டிச 04, 2025 05:42 AM

சென்னை: ''மாற்றுத்திறனாளிகள் இனி அரசு கொண்டு வரும் திட்டங்களின் பயனாளி கள் மட்டுமல்ல; மாறாக, அரசு திட்டங்களில் தங்கள் குரலை பதிவு செய்யப்போகும் மக்கள் பிரதிநிதிகள்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, உள்ளாட்சி அமைப்புகளில் நியமிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி பிரதிநிதிகளை, அறிமுகம் செய்யும் விழா, சென்னையில் நேற்று நடந்தது.
வள்ளுவர் கோட்டத்தில் நடந்த விழாவில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 400 பேருக்கு, 4.12 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
பின், அவர் பேசியதாவது:
மாற்றுத்திறனாளிகள், சமூகத்தில் முழு 'சார்ஜ்' எடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அந்த வகையில், உள்ளாட்சி அமைப்புகளில், 3,631 மாற்றுத்திறனாளிகள், பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஒன்பது மாவட்டங்களில், உள்ளாட்சிகளில் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற அமைப்புகளில், உறுப்பினர்களை நியமிக்கும் போது, கூடுதலாக 9,000க்கும் அதிகமானோர் அதிகாரம் பெறுவர்.
இதுதான், நாட்டின் மற்ற பகுதியில் இருந்து தமிழகத்தை வேறுபடுத்தி காட்டுகிறது. இந்த மரபில், நாம் இன்று துவங்கும் பயணம், மிக, மிக முக்கியமானது.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை கருணை அல்ல; 'உரிமை' என்பதை உணர்த்த, தி.மு.க., அரசு பாடுபட்டு வருகிறது.
உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத்திறனாளி உறுப்பினரை நியமித்து, சமூக நீதி உரிமையை வழங்கி இருக்கிறோம். இனி நீங்கள் அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பயனாளிகள் மட்டுமல்ல; அரசு திட்டங்களில், தங்கள் குரலை பதிவு செய்யப்போகும் மக்கள் பிரதிநிதிகள். இவ்வாறு அவர் பேசினார்.

