ரேஷன் கடைகளில் காலி பணியிடத்தில் சுய உதவி குழுவினரை நியமிக்க உத்தரவு
ரேஷன் கடைகளில் காலி பணியிடத்தில் சுய உதவி குழுவினரை நியமிக்க உத்தரவு
UPDATED : நவ 14, 2026 06:23 PM
ADDED : நவ 14, 2026 06:23 PM
சென்னை: ரேஷன் கடைகளில், காலியிடங்களுக்கு நிரந்தர பணியாளர்கள் தேர்வு செய்யப்படும் வரை, சுய உதவி குழு உறுப்பினர்களை நியமித்து, கடைகளை நடத்துமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், கூட்டுறவு துறை சார்பில், 36,300 ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. இவற்றில், 1,714 விற்பனையாளர்கள் மற்றும், 176 எடையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பலர் தங்கள் கடையை மட்டுமின்றி, காலியிடம் உள்ள கடைகளையும் சேர்த்து கவனிக்கின்றனர். இதனால், கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.
ரேஷன் கடைக்கு, மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் வாயிலாக, ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான நடைமுறைக்கு, அவகாசம் தேவைப்படுகிறது. எனவே அதுவரை, காலியிடங்களுக்கு நிரந்தரப் பணியாளர்கள் தேர்வு செய்யப்படும் வரை, சுய உதவி குழு உறுப்பினர்களை நியமித்து, ரேஷன் கடைகளை நடத்துமாறும், வீடு தேடி ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்திற்கு, அவர்களை ஈடுபடுத்துமாறும், மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
சுய உதவிக் குழு உறுப்பினர்களை, ரேஷன் கடைக்கு தேர்வு செய்ய, ஒவ்வொரு மாவட்டத்திலும், கலெக்டர் தலைமையில், கூட்டுறவு இணை பதிவாளர், மகளிர் திட்டத்தின் திட்ட அலுவலர் உறுப்பினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு, ரேஷன் கடை வாரியாக, காலியிட விபரங்களை, கூட்டுறவு துறையிடம் இருந்தும், தகுதியான சுய உதவி குழு உறுப்பினர்களின் விபரங்களை, மகளிர் திட்ட அலுவலரிடம் இருந்தும் பெற்று, ஆட்களை தேர்வு செய்யும்.
தேர்வு செய்யப்படுவோருக்கு, ரேஷன் கடையில் உள்ள, விற்பனை முனைய கருவியில், கார்டுதாரர்களின் விபரங்களை பதிவு செய்து, பொருட்கள் வழங்குவது தொடர்பாக பயிற்சி அளிக்கப்படும். தற்காலிகமாக நியமிக்கப்படும், சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு, தினமும் தலா, 400 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். மாதத்திற்கு அதிகபட்சமாக விற்பனையாளருக்கு, 7,500 ரூபாய், எடையாளருக்கு, 6,600 ரூபாய்க்கு, மிகமால் இருக்க வேண்டும் என, கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது.
