ரேஷன் பொருட்கள் இனி வீடு தேடி வரும்; 10 மாவட்டங்களில் ஜூலை 1ல் துவக்கம்
ரேஷன் பொருட்கள் இனி வீடு தேடி வரும்; 10 மாவட்டங்களில் ஜூலை 1ல் துவக்கம்
ADDED : ஜூன் 28, 2025 04:02 AM

சென்னை : வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம், சென்னை உட்பட 10 மா வட்டங்களில், ஜூலை 1ம் தேதி முதல் சோதனை ரீதியாக துவங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
தமிழக ரேஷன் கடைகளில், 2.25 கோடி கார்டுதாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் மாதந்தோறும் வழங்கப்படுகின்றன. கார்டில் உள்ள உறுப்பினர்கள், கடைக்கு சென்று விற்பனை முனைய கருவியில் கைரேகையை பதிவு செய்தால் தான் பொருட்கள் வாங்க முடியும்.
மூத்த குடிமக்கள், நடக்க முடியாத அளவு உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும், தங்களின் சார்பில் வேறு நபரை அனுப்பி பொருட்கள் வாங்கலாம். இதற்காக அவர்கள், மற்றவர்களின் உதவியை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
எனவே, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி கார்டுதாரர்களின் வீடுகளில் நேரடியாக ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும் திட்டத்தை துவக்க, அரசு முடிவு செய்துள்ளது.
இத்திட்டம் சோதனை ரீதியாக, வரும் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஈரோடு, தர்மபுரி, நாகை, நீலகிரி, கடலுார் ஆகிய மாவட்டங்களில் துவங்க உள்ளது.
முதற்கட்டமாக, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளன.
இதற்கான ஏற்பாடுகள் செய்வது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை உயரதிகாரிகள், மண்டல இணை பதிவாளர்கள் மற்றும் மாவட்ட வழங்கல் அதிகாரிகளுடன், ஆன்லைன் வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினர்.
இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வேனில் ரேஷன் பொருட்கள், விற்பனை முனைய கருவி, விழிரேகை கருவியை எடுத்துச் சென்று, 'ஆதார்' சரிபார்க்கப்பட்டு மூத்த குடிமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை பயனாளிகள் என்ற விபரத்தை உணவு துறை வழங்கும்; அதற்கு ஏற்ப கூட்டுறவு ஊழியர்கள் வினியோகிப்பர்.
வரும் சுதந்திர தினம் அல்லது செப்., மாதத்தில் இருந்து, மாநிலம் முழுதும் உள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு, ரேஷன் பொருட்கள் நேரடியாக வினியோகம் செய்யப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.